யூடியூபர் மதனை ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாபேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை தனது யூடியூப் சேனலில் சட்டவிரோதமாக நடத்தி வந்த மதன், சிறுவர், சிறுமிகளிடம் காது கொடுத்து கேட்க முடியாத வார்த்தைகளில் ஆபாசமாக பேசியுள்ளார். இதுகுறித்தான நூற்றுக்கும் மேற்பட்ட புகார்களின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், மதனை நேற்று கைது செய்தனர். தர்மபுரியில் பிடிபட்ட மதனை நேற்றிரவு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்து வந்து விடிய விடிய போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மதன் பண மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. யூடியூப் மதனிடம் பணத்தை இழந்தவர்கள் புகாரளிக்க இமெயில் ஒன்றை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
தொடர்ந்து, இன்று(ஜூன் 19) பிற்பகல் சைதாப்பேட்டை 11ஆவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரமசிவம் முன்பு மதன் ஆஜர்படுத்தப்பட்டார். மதனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 700 வீடியோக்களிலும் ஆபாசமாக பேசியது மதன்தான் என்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, 14 நாட்கள், அதாவது ஜூலை 3ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். தற்போது மதன் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே மதனின் மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
**-வினிதா**
�,