சிவா
**வீடியோ கேம் பற்றிய தொடர்**
பப்ஜி என்று சொல்லப்படும் வீடியோ கேம் இப்போது பலரையும் வசியப்படுத்தியிருப்பது தெரிந்ததுதான். அந்த வசியத்தைப் பற்றியும் அந்த வசியத்தைத் தாண்டியும் அதுபற்றி விவாதிக்கப்படும் விவகாரங்கள்தான் இன்று வீடியோ கேம் உலகில் ஹாட் டாபிக்!
Player Unknown Battle Royal என்பதன் சுருக்கமே ‘PUBG’ எனப்படுகிறது. எத்தனையோ நாடுகளில் இந்த வீடியோ கேம் விளையாடப்பட்டாலும், இந்தியாவில் இது மிக மிகப் பிரபலம். இங்கு இதற்காகவே பேரணி சென்றது, தீம் சாங் உருவாக்கியது, உலக அளவில் பார்க்கப்பட்டுக் கொண்டிருந்த பிரதமருடனான உரையாடல் நிகழ்ச்சியில் ‘PUBG’ என்ற வார்த்தையை அவர் உச்சரித்தது என பப்ஜி இங்கேதான் பெருமையடைந்துவந்தது.
அதே பப்ஜி இப்போது சர்ச்சைக்கும் உள்ளாகியிருக்கிறது. ‘ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட சிறுவன்’, ‘PUBGயைத் தடை செய்ய வேண்டும் என நீதிமன்றம் சென்ற சிறுவன்’ என்ற எதிர்மறையான கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
இதன் சாதக, பாதகங்கள் பற்றிப் பேசுவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய இரண்டு அம்சங்கள் உள்ளன. அவை: இதன் ஆணி வேர் என்ன, அத்தனை சீக்கிரத்தில் ஒருவரை இது ஆக்கிரமிப்பது எப்படி?
**ஒரே நாளில் உருவானதா PUBG?**
1996இல், கோஷுன் டகாமி என்பவரால் எழுதி முடிக்கப்பட்ட “Battle Royale” என்ற நாவலின் அடிப்படையே இன்றைய PUBG. விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டபோது நிராகரிக்கப்பட்டு, மூன்று வருடங்களுக்குப் பிறகு நாவலாக வெளிவந்தபோது விற்பனையில் சக்கை போடு போட்டது. 2000இல் திரைப்படமாக வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டது.
வீடியோ கேமில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டு, புதிய வீடியோ கேம்களை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தபோது, ஏற்கனவே பல சிறிய கேம்களாக Battle Royale பரிச்சயப்பட்டிருந்தது. அவற்றில் பணியாற்றியிருந்த பிரெண்டன் கிரீன் என்பவர் PUBG கேமை உருவாக்கினார். அயர்லாந்தில் பிறந்து பிரேசிலில் செட்டிலாகி, அமெரிக்க வீடியோ கேம் துறையில் PUBG கேமை அவர் எப்படிப் பிரபலப்படுத்தினார். PUBG கேம் கடல் தாண்டி இந்தியாவுக்குள்ளும் எப்படி புகுந்தது?
**இந்தியாவுக்குள் எப்படி அனுமதித்தார்கள்?**
தீவிரவாதச் செயல்களைத் தமிழ்த் திரைப்படங்களில் காட்டும்போது, ‘இந்த நாசவேலையைச் செய்வதற்கு இந்தியாதான் சிறந்த, இலகுவான இடமாக இருந்தது’ என்று சித்திரிப்பார்கள். அது தீவிரவாதத்துக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, டிஜிட்டல் உலகத்துக்கு 100% பொருந்தும். டிஜிட்டல் உலகத்தைப் பொறுத்தவரையில் எவ்வித வடிகட்டுதலும் இல்லாமல் இந்திய மக்களை யாராலும் மிக சீக்கிரத்தில் அணுக முடியும். அப்படியே PUBG வந்து சேர்ந்தது. ஆனால், அதை இந்திய இளைஞர்கள் எதிர்கொண்ட விதம் மிகவும் கேலிக்கூத்தானது.
வடஅமெரிக்கா எப்போதும் இதுபோன்ற வீடியோ கேம்களுக்கு சொர்க்கம் போன்றது. சில வருடங்களுக்கு முன்னால் ஊரைச் சுற்றிக்கொண்டு வெட்டித்தனமாகப் பொழுதுபோக்கிக்கொண்டிருந்த இளைஞர்கள் அனைவரும் தற்போது மல்டி மில்லினியர்கள். அவர்கள் தங்களது வீடியோ கேமை விளையாடி அதைப்பற்றி விமர்சனம் செய்ய மாட்டார்களா என்று பில்லியனில் முதலீடு செய்த நிறுவனங்கள் காத்திருக்கின்றனர். இதற்குக் காரணம், தங்களது திறமையை வியாபாரமாக்கும் அந்த இளைஞர்களது யுக்தி.
பொழுதுபோக்குக்காக வீடியோ கேம் விளையாடினோம்; அது முடிந்ததும் அடுத்த கேமுக்குச் சென்றோம் என்றில்லாமல், தங்களது அனுபவத்தை வீடியோவாக எடுத்துப் பதிவு செய்யத் தொடங்கினர் வடஅமெரிக்க இளைஞர்கள். அதனால், வீடியோ கேம்களின் விற்பனை அதிகரிப்பதை உணர்ந்தவர்கள் தங்களது கேம் ரிலீஸாவதற்கு முன்பே இவர்களிடம் கொடுத்தனர். அவற்றை விளையாடி அவர்களும் வீடியோக்களை வெளியிட்டனர். எந்த அளவுகோலும் இல்லாத யூடியூப் போன்ற சமூக வலைதளங்கள் அவற்றை உலகம் முழுவதும் கொண்டுசென்றதால், வீடியோ கேம்களின் முன்பதிவு எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. இதற்காக வீடியோ கேம் நிறுவனங்கள் கொடுக்கும் பணம், சமூக வலைதளங்களில் பார்க்கப்படுவதால் கிடைக்கும் வருமானம், அந்த வீடியோக்களின் இடையே விளம்பரப்படுத்தப்படும் பொருட்களினால் கிடைக்கும் பணம் என மூன்று மாதத்தில் ஒருவரால் மில்லினியராக உருவாக முடிந்தது.
அப்படிப் பரவத் தொடங்கிய வீடியோக்களைப் பார்த்தே பல நாடுகளில் PUBG அறிமுகமானது. தனது எல்லைகளை விஸ்தரித்து, தற்போது கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன், பிளே ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ் எனக் கட்டுக்கடங்காமல் சென்றுகொண்டிருக்கிறது. அப்படி வீடியோவாகத் தொடங்கப்பட்ட போரில் சேர்ந்தவர்கள்தான் இந்திய இளைஞர்கள். தற்போது, அந்தப் போரில் ஓர் உயிர் பலியாகியிருக்கிறது.
**பெத்த கடன் வளர்ப்பதில் மட்டுமா?**
டெர்மினேட்டர் படத்தில், ‘ஜெனிசிஸ் தான் ஸ்கைநெட். ஜெனிசிஸ் ஆன்லைனில் வந்தால், ஜட்ஜ்மெண்ட் தினம் தொடங்கும். ஜெனிசிஸ் தொடங்குவதற்கு முன்பே அதைக் கொன்றுவிட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்” என்ற தகவலை, தனது குழந்தைப் பருவ கேரக்டரிடம், இளைஞனான கைல் ஆழ்மனதில் புதைப்பார். அதுபோலவே, வீடியோ கேம் என்ற ஒன்றை விளையாடத் தொடங்கும்போதே, ‘இது மிக ஆபத்தானது. இதனால் உன் வாழ்க்கை சீர்கெட்டுவிடும்’ என்பதை சிறுவர்களின் ஆழ்மனதில் பெற்றோர்கள் புதைத்துவைப்பது நடைபெறுகிறது. மனநல நிபுணர்கள்கூட, ‘இப்படி எதையாவது உங்கள் குழந்தைகள் மனதில் பதிவு செய்தீர்களா?’ என்று கேட்பதில்லை. மாறாக, இது ஆரம்பத்திலேயே நிவர்த்தி செய்யவேண்டிய நோய் என்று புரியாத பெயரைச் சொல்லி மருத்துவமனையில் அட்மிட் செய்துவிடுகிறார்கள்.
இன்னொரு நாட்டில் எந்தத் திறமையால் ஒருவர் மல்டி மில்லினியராக உருவாகிறாரோ, அதேபோன்ற ஒருவர் இந்தியாவில் மனநலம் பற்றிய வகுப்பினில் உட்கார்ந்துகொண்டிருக்கிறார். காரணம், பயம். தெரியாததுடன் பழகத் தொடங்கும்போது உருவாகிற அந்நிய உணர்வு.
டிஜிட்டல் புரட்சியால் உருவான சமூக வலைதளங்களின் வீச்சு, இதுபோன்ற கேம்களையும் அவற்றை வைத்து சம்பாதிக்கும் முயற்சிகளையும் இளைஞர்களிடையே கொண்டுவந்திருக்கிறது. இந்தியா முழுவதுமுள்ள ஒவ்வொரு மாநிலம், ஒவ்வொரு மொழி, ஒவ்வொரு பகுதி முதற்கொண்டு தனித்தனிக் குழுக்களாக இதுபோன்ற வீடியோ கேம்களை விளையாடி, அவற்றின் மூலம் நேர்மையாகச் சம்பாதிக்கும் பழக்கம் இளைஞர்களிடையே அதிகரித்திருப்பது கண்கூடாகத் தெரிகிறது. அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளில், பெற்றோர்களின் அரவணைப்பின்றி வாழும் சில இளைஞர்கள் தொடங்கிவைத்ததை, குடும்பத்தின் கதகதப்புடன் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்திய இளைஞர்கள் சரியான ஊக்குவிப்புடன் திறமையை வெளிக்காட்டினால் என்னவாகும் என்பதை நினைத்துப்பார்க்க நன்றாகத்தான் இருக்கும். ஆனால், அது சாத்தியமா?
**என் குழந்தை பெரிய வீடியோ கேம் பிளேயரா வரணும் சார்!**
படிக்கும்போதே சிரிப்பாக இருக்கிறதா? ஆனால், இதுதான் உலகம் முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதிகாரபூர்வமாக, அந்தந்த வீடியோ கேம் நிறுவனங்களாலும், தனித்தனியாகப் பல தனியார் அமைப்புகளாலும் நடத்தப்படும் போட்டிகளில் கலந்துகொண்டு பல லட்சங்களைப் பரிசாக வெல்கிறார்கள். 2018ஆம் ஆண்டு நடத்தப்பட்ட PUBG உலகப் போட்டியில் வழங்கப்பட்ட பரிசுத்தொகை 71 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய். பரிசு பெற்றவர்கள் 18 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களைப் போல வெற்றியடைய வேண்டும் என்ற ஆர்வத்துடன் முயற்சி செய்பவர்கள் தங்களது விளையாட்டை வீடியோ ரெக்கார்டிங் செய்து யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர், டிஸ்கார்டு, டுவிட்ச், இன்ஸ்டகிராம், டிக்டொக் என அனைத்துச் சமூக வலைதளங்களிலும் பதிவு செய்து மாதத்துக்குப் பல ஆயிரங்களைச் சம்பாதிக்கிறார்கள்.
(விளையாட்டு தொடரும்…)�,