‘பெப்ஸி கோ நிறுவனத்தின் உருளைக்கிழங்கு விதைகளை விவசாயிகள் சாகுபடி செய்யக் கூடாது, அதற்கான உரிமம் எங்களிடம்தான் உள்ளது’ என்று சொல்லி வந்த பெப்சி கோ நிறுவனத்தின் விதைகளை விவசாயிகள் சாகுபடி செய்யலாம் என்று கூறிய பயிர் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமைச் சட்ட ஆணையம், விதைக்கான உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது . இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பெப்சி நிறுவனம், ‘லேஸ்’ (Lays) என்ற பெயரில் உருளைக்கிழங்கு சிப்ஸ்களைத் தயாரித்துச் சந்தைப்படுத்தி வருகிறது. தங்கள் தேவைக்காக, எஃப்சி-5 (FC-5) என்ற பெயரில் ஓர் உருளைக்கிழங்கு ரகத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த ரகத்துக்குக் காப்புரிமையும் பெற்றுள்ளது.
இந்த ரக விதைகளை ஒப்பந்த அடிப்படையில் குஜராத் மாநில விவசாயிகளுக்கு வழங்கியது. அதன்படி விவசாயிகளும் சாகுபடி செய்து பெப்சி நிறுவனத்திடம் விற்பனை செய்தார்கள். பெப்சி நிறுவனம் கொடுத்த விதைகளில் எஞ்சியவற்றை விவசாயிகள் சாகுபடி செய்து வெளியில் விற்பனை செய்தார்கள்.
‘நாங்கள் காப்புரிமை பெற்றுள்ள உருளைக்கிழங்கு ரகத்தை, எங்கள் அனுமதி இல்லாமல் விவசாயிகள் எப்படி விளைவிக்கலாம், விற்பனை செய்யலாம். இதற்காக, ஒவ்வொரு விவசாயியும் நஷ்டஈடு வழங்க வேண்டும்’ என விவசாயிகள்மீது, அகமதாபாத் நீதிமன்றத்தில் 2019ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தது பெப்சி நிறுவனம்.
பயிர் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமைச் சட்டப்படி, குறிப்பிட்ட ரகத்துக்கு காப்புரிமை பெற்றவர்கள், அந்த ரகத்தை விளைவித்து விற்பனை செய்து கொள்ளலாம் என்ற சட்டம் இந்தியாவில் இருப்பதால், இந்த வழக்கு எடுபடாது என்பதை உணர்ந்து, இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்கு வெளியே பேசி தீர்த்துக் கொள்ளலாம் என்று முன்வந்தது. விவசாயிகள் பேச்சு வார்த்தைக்கு முன்வரவில்லை.
இந்த நிலையில் ஆஷா அமைப்பைச் சேர்ந்த கவிதா குருகந்தி பயிர் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமை (Protection of Plant Varieties and Farmers Rights Act- PPVFR) சட்டத்தின்படி மீண்டும் விவசாயிகள் உரிமைகளை நிலைநாட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள நீடித்த, நிலையான வேளாண்மைக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கவிதா குருகந்தி, “1995ஆம் ஆண்டு உலக வர்த்தக நிறுவன ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டபோது பன்னாட்டு நிறுவனங்களின் விதைகளை இந்தியாவில் விவசாயிகள் சாகுபடி செய்ய உரிமை உண்டு என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில்தான் அதில் கையெழுத்திட்டது.
விதை விஷயத்தில் தனிநபர், நிறுவனம் காப்புரிமை பெற்றிருந்தாலும் அது விவசாயிகளை சாகுபடி செய்வதில் எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்பதுதான் விதி. மற்ற நாடுகளில் எப்படியோ இந்தியாவில் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்திருந்தது. இதற்கென பயிர் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமைச் சட்டம் – 2001 (Protection of Plant Varieties and Farmers Rights Act-2001 PPVFR) கொண்டு வரப்பட்டது.
சட்டத்தின் 39ஆம் பிரிவு, ‘ஒரு விவசாயி தனது நிலத்தில் விளையும் பயிரை, பயன்படுத்திக்கொள்ளவோ, பரிமாறிக்கொள்ளவோ, விற்பனை செய்யவோ உரிமை உள்ளது’ என்கிறது. இதன்படி பயிர் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமைச் சட்ட ஆணையத்துக்கு இந்தியாவில் இருக்கும் விதைகள் சம்பந்தமான சட்டங்கள் குறித்து கடிதம் அனுப்பினேன். இதை ஏற்றுக்கொண்ட ஆணையத்தின் தலைவர், பெப்சி கோ நிறுவனத்தின் விதைக்கான உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிட்டார்.
இது இந்திய விவசாயிகளின் வெற்றி. இந்தியாவில் தனியார், கார்ப்பரேட், பாரம்பர்ய விதைகள் என எந்த விதைகளையும் பயிர் செய்யலாம். அதை விவசாயிகளுக்கிடையே பரிமாறி கொள்ளலாம். அதை விற்பனையும் செய்யலாம். ஆனால், எந்த பிராண்டு பெயரிலும் விற்பனை செய்யக்கூடாது என்பது மட்டுமே விதிமுறை.
இந்தியாவில் இருக்கும் இந்த விதை உரிமைக்கான சட்டம் வேறு எந்த நாட்டிலும் இல்லை. இனி, எந்த கார்ப்பரேட் நிறுவனமும் விவசாயிகளை விதை விஷயத்தில் மிரட்ட முடியாது. வழக்கும் தொடுக்க முடியாது” என்று விளக்கமளித்துள்ளார்.
**-ராஜ்**
.
�,”