கேரள மாநிலம் கண்ணூர் பல்கலைக் கழகத்தில் 80ஆவது இந்திய வரலாற்று மாநாடு (80th Indian History Congress) நேற்று (டிசம்பர் 28) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கேரள ஆளுநர் அரீஃப் முகமது கான் கலந்துகொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும் வந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்,
அப்போது, ஆளுநர் தனது பேச்சின் நடுவே குடியுரிமை சட்டத்திருத்தம் பற்றியும் காஷ்மீர் விவகாரம் பற்றியும் கருத்து தெரிவித்ததற்குக் கூட்டத்தில் இருந்த மாணவர்களிடத்தில் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக டெல்லி ஜாமியா மிலியா, ஜேஎன்யூ மற்றும் அலிகார் பல்கலைக் கழகத்தை சேர்ந்த மாணவர்கள் 4 பேர் அரீஃப் முகமதுவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பதாகைகள் ஏந்தியும், முழக்கங்கள் எழுப்பியும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆளுநரின் பேச்சு வெறுப்புணர்வைத் தூண்டும் விதமாக இருப்பதாகவும் கண்டனம் தெரிவித்தனர்.
அப்போது, “விவாதங்கள் மற்றும் கலந்துரையாடலுக்கான கதவுகளை அடைப்பது நீங்கள் வன்முறை கலாச்சாரத்தை ஊக்குவிப்பதாகவே அர்த்தம் என போராட்டக்காரர்களுக்குப் பதில் கொடுத்தார் கேரள ஆளுநர். பயத்தின் காரணமாக விவாதிக்க முன்வருவதில்லை. தனிநபர் நம்பிக்கையின் அடிப்படையில் எந்தவொரு இடத்தையும் உருவாக்க முடியாது. நாட்டின் பிரிவினை ஒரு அசாதாரண சூழலை ஏற்படுத்திவிடும்” என்றும் குறிப்பிட்டார்.
இத்தகைய பிரிவினைவாதத்தால் கேரள மக்கள் பாதிக்கப்படவில்லை. ஆனால் பிரச்சினை என்னவென்றே தெரியாமல் அண்டை மாநிலங்களைப் பார்த்து இவர்களும் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்” என்றார். பாகிஸ்தான் காஷ்மீர் இன்னும் முடிக்கப்படாத கதை என்றும் அவர் குறிப்பிட்டார். இதையடுத்து என்.ஆர்.சி மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் உள்ளேயே முழக்கங்கள் எழுப்பினர். ஆளுநருக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்களைக் கட்டுப்படுத்த போலீசார் முயன்றனர்.
அரங்கிற்குள் போராட்டம் நடத்த வேண்டாம் என ஆளுநரே கேட்டுக்கொண்ட பின்பும் கூட மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். ”அவர்கள் ஒரு நோக்கத்துடன் வந்துள்ளனர். இந்நிகழ்விற்கு இடையூறு ஏற்படுத்தவோ, வன்முறை ஏற்படுத்தவோ இவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அச்சுறுத்தல் ஏற்படுத்த முயல்கின்றனர்” என்று ஆளுநர் குற்றம்சாட்டினார். இச்சம்பவத்தால் நிகழ்ச்சி அரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ஆளுநர் தனது பேச்சைப் பாதியிலேயே முடித்துக்கொண்டார்.
இச்சம்பவம் குறித்து கல்லூரியின் பேராசிரியர் இர்பான் ஹாபிப் கூறுகையில், “மாணவர்களின் போராட்டத்தால் ஆளுநர் மிகவும் கோபமடைந்தார். காஷ்மீரைப் பற்றியோ, குடியுரிமை சட்டத்தைப் பற்றியோ பேசக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என கூறினார்” என்றார்.
மேலும் இச்சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க கண்ணூர் பல்கலைக்கழக துணைவேந்தர் கோபிநாதன் ரவீந்திரனுக்குச் சம்மன் அனுப்பியதுடன், அரங்கிலிருந்த அனைத்து சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்கவும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.�,”