கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்புவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் 100 இணைப்புகளைக் கொண்ட கொரோனா கட்டுப்பாட்டு மையத்தை இன்று(ஏப்ரல் 18) மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் திறந்து வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ கொரோனா மற்றும் தடுப்பூசி குறித்த சந்தேகங்களை 044-46122300, 044-25384520 என்ற எண்களில் தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளலாம்.
கடந்த ஆண்டு கட்டுப்பாட்டு மையத்திற்கு 2 லட்சம் அழைப்புகள் வந்தன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் கட்டுப்பாட்டு மையங்கள் மூலம் செய்யப்படுகிறது.
தடுப்பூசிக்கும் நடிகர் விவேக்கின் மரணத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதுகுறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்கள் மீது பொது சுகாதார சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம். தமிழகத்தில் முழு ஊரடங்கு வருவதற்கு வாய்ப்பில்லை, ஆனால், புதிய கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்படும். சென்னையில் உள்ள உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி, திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை குறைப்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும். இதுகுறித்தான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும்.
மாநகராட்சிக்கு சொந்தமாக 240 விளையாட்டுத் திடல்கள் உள்ளன. இவற்றை முழுமையாக மூட முடியாது என்பதால், அங்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். மால்களில் முகக்கவசம் இல்லாமல் வருபவர்களை அனுமதிக்கக் கூடாது. அதிகளவிலான மக்கள் கூட்டத்தை அனுமதித்தால் முதலில் அபராதம் விதிக்கப்படும். அடுத்த தடவை கடைகள் மூடப்படும்.
சென்னையில் உள்ள கொரோனா மையங்களில் 12 ஆயிரத்து 600 படுக்கைகள் உள்ளன. தற்போதுவரை 1,104 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை முழுதும் 20 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். அதில் 80 சதவிகிதம் பேர் வீட்டிலே தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். அன்றாட வாழ்க்கையில் கொரோனா வழிகாட்டுமுறைகளை மக்கள் பின்பற்றினால் மட்டுமே பரவலை கட்டுப்படுத்த முடியும்” என தெரிவித்தார்.
**வினிதா**
.�,