bஸ்டெர்லைட் ஆலையை அகற்றக் கோரி தர்ணா!

Published On:

| By admin

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற கோரி கலெக்டர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் தர்ணா போராட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வக்கீல் அரிராகவன் தலைமையில், கூட்டமைப்பை சேர்ந்த சுமார் 100 பேர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மெயின் ரோட்டில் இருந்து ஊர்வலமாக வந்தனர். அவர்களை கலெக்டர் அலுவலகம் முன்பு போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனை தொடர்ந்து கூட்டமைப்பினர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சம்பத், கணேஷ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். முக்கிய நிர்வாகிகள் மட்டும் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்குமாறு அறிவுறுத்தினர் ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதனை ஏற்க மறுத்து விட்டனர். அனைவரையும் உள்ளே அனுமதிக்க வேண்டும், இல்லையெனில் மாவட்ட கலெக்டர் இங்கு வந்து பேச வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து அவர்களை கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக அழைத்து சென்றார். அங்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், தூத்துக்குடியில் சாதி, மத பாகுபாடு அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தும் நடவடிக்கைளில் ஸ்டெர்லைட் நிறுவனம் ஈடுபட்டு உள்ளது. இதனால் மக்களிடையே மோதல் போக்கு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

எனவே, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் ஸ்டெர்லைட் ஆலையை சிப்காட் வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். மேலும், மூடப்பட்டு உள்ள ஆலைக்குள் ஸ்டெர்லைட் அலுவலர்கள் சென்று வருவதை தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share