அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவின் எதிர்ப்பையும் மீறி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி இன்று (அக்டோபர் 15) ஏனாம் சென்றுள்ளார். அவரது வருகைக்கு வீடுகளில் கருப்புக் கொடி கட்டியும், கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியம், ஆந்திரா கோதாவரி நதி கடற்கரையிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது. ஏனாமில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளும் கிரண் பேடி, இன்றும் நாளையும் அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறார். இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் சுற்றுலாத் துறை அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணாராவ் கிரண்பேடி வருகைக்கு ஏற்கனவே எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.
கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த மல்லாடி கிருஷ்ணாராவ் , 2017 ஆம் ஆண்டு கிரண் பேடி ஏனாம் வந்த போது, இங்குள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்துத் தெரிவித்திருந்தோம். அதன் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் அவர் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார். மேலும், ஏனாமில் மத்திய அரசு நிதியில் வெள்ளத் தடுப்புச் சுவா் கட்டும் பணியை ஆளுநர் கிரண் பேடி தடுக்கிறார். வெள்ள நிவாரணம், புயல் நிவாரணம் வழங்கவில்லை. இலவச அரிசி வழங்கவில்லை. நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை. எந்தவிதமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஆளுநர் கிரண் பேடி ஏனாம் வந்தால் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்திருந்தார். தொகுதி சட்டமன்ற உறுப்பினரான தனக்கு தெரிவிக்காமல் ஏனாம் வரும் கிரண்பேடி மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வரப்படும் எனவும் அவர் அறிவித்திருந்தார். அவரது ஆதரவாளர்களும் கிரண் பேடி புதுச்சேரி வரும் போது போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.
இந்த நிலையில் துணை நிலை ஆளுநர் நேற்று இரவு ஏனாம் சென்றுள்ளார். அவருக்கு எதிராக அமைச்சரின் ஆதரவாளர்கள் இன்று கருப்பு பலூன் பறக்க விட்டு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி go back kiran bedi என பேனர் வைக்கத் திட்டமிட்டுள்ளனர். வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஏனாம் பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் ஆந்திராவிலிருந்து வரவழைக்கப்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
�,