தர்மபுரி மாவட்டம், வெண்ணாம்பட்டியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தோண்டப்பட்ட குழியின் முன்பு பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி வெண்ணாம்பட்டி அசோக் நகர் பகுதியில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் ஏற்கனவே தனியார் நிறுவனத்தின் செல்போன் கோபுரம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் புதிதாக மற்ெறாரு தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கு அந்தப் பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுத்தனர். ஏற்கனவே இந்தப் பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தின் அருகிலேயே இந்த கோபுரத்தையும் அமைக்கக் கட்டுமான பணிகள் தொடங்கியது. முதற்கட்டமாக கோபுரம் அமைக்க குழி தோண்டும் பணி நடைபெற்றது.
இந்த நிலையில் வெண்ணாம்பட்டி அசோக் நகரில் புதிதாக செல்போன் கோபுரம் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தோண்டப்பட்ட குழியின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செல்போன் கோபுரத்தில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு பாதிப்பை தடுக்க இந்த பகுதியில் கோபுரம் அமைக்கக் கூடாது என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
**-ராஜ்-**
.