குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்ற வன்முறைகளால் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
**பிகார்**
நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், பிகாரில் நேற்று தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் ஆளும்கட்சிக்கு எதிராக ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பல இடங்களில் ராஷ்டிரிய ஜனதா தளம் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் செல்லும் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. ரயில்களை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் அமைதியாகப் போராட்டம் நடைபெற்று வருவதாகக் கூறிய சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் வெளியாகின. அதில் அக்கட்சியைச் சேர்ந்த சிலர் அங்கு வரும் ஆட்டோக்களை அடித்து நொறுக்குவது பதிவாகியுள்ளது. இதனிடையே தலைநகர் பாட்னாவில் தேஜஸ்வி யாதவ் தலைமையில் மெகா பேரணி நடந்தது. இதில் பல ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு எதிர்ப்பத் தெரிவித்தனர்.
#WATCH RJD workers vandalise auto rickshaws in Bhagalpur during ‘bandh’ called by the party against Citizenship Act and National Register of Citizens. #Bihar pic.twitter.com/ybYyH2s3Ot
— Kalyansingh भारतीय जनता पार्टी (@Kalyans13859545) December 21, 2019
**உத்தரப் பிரதேசம்**
உத்தரப் பிரதேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மற்றும் வன்முறையில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர். மீரட்டில் நான்கு பேரும், மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் எட்டு வயது சிறுவனும், மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் நடைபெற்ற போராட்டத்தில் ஆறு பேரும் என இதுவரை 11 பேர் உயிரிழந்திருப்பதாக போலீசார் கூறுகின்றனர். ஆனால், இவர்கள் யாரும் போலீசார் துப்பாக்கிச் சூட்டில் இறக்கவில்லை. போராட்டத்தின்போது 263 காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 705 பேர் காயமடைந்துள்ளனர் என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
**அசாம்**
அசாமில் நடைபெற்ற போராட்டத்தில் முதல்வர் சோனோவால் வீடு மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனிடையே சோனோவால், “வங்க தேசத்திலிருந்து யாரும் அசாமுக்கு வர மாட்டார்கள். எனவே, இங்குள்ளவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை” என்று கூறியுள்ளார். இதனிடையே இன்று மதியம் கவுகாத்தியில் ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான பெண்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர். கவுகாத்தியில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றதால் அங்கு இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளது. சிஏஏ மற்றும் என்ஆர்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட வன்முறையால் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில், பெங்களூரு, உபி, அசாம் என இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
**டெல்லி**
டெல்லியில், நேற்று முன்தினம் மாலை ஜுமா மசூதியில் தொழுகைக்குப் பிறகு தர்யாகஞ்சில் ஏராளமானோர் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து போலீசார் கலைக்க முயன்றனர். அப்போது கல்வீச்சு தாக்குதலும் நடத்தப்பட்டது. போலீஸ் வாகனம் ஒன்று எரிக்கப்பட்டது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக சிறுவர்கள் உட்பட 40 பேரை போலீசார் கைது செய்து நேற்று விடுவித்தனர். ஆனால், நேற்று காலை பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத்தை கைது செய்த போலீசார் அவரை விடுவிக்காமல் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதையடுத்து, சந்திரசேகர் ஆசாத் டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி முறையிட்டார். ஆனால் அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் கோரப்பட்டது.
இந்த நிலையில், சந்திரசேகர் ஆசாத்தின் ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிமன்றம், அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.�,”