இன்றைய சூழ்நிலையில் இயற்கையோடு இணைந்து வாழ்வதே நம் எதிர்காலம் என்றாகிவிட்டது. அதற்கு நமக்கு உற்றதுணையாக இருப்பவை சிறுதானியங்கள். நம் பாட்டியும் தாத்தாவும் வயதான காலத்திலும் ஆரோக்கியத்தோடு வாழ்வதைப் பார்த்திருப்போம். அதற்கு காரணம், அவர்கள் சிறுவயதில் சாப்பிட்ட சிறுதானியங்களால் ஆன பாரம்பரிய உணவு வகைகளே. ஆனால், சிறுதானிய உணவுகளை எப்படிச் செய்வது என்று தெரியாதவர்கள் பலருண்டு. அவர்களுக்கு எளிமையாகச் செய்யக்கூடிய இந்த வரகு தயிர் சாதம் உதவும்.
**என்ன தேவை?**
வரகு – 200 கிராம்
பால் – 200 மில்லி
தயிர் – ஒரு கப்
கடுகு, உளுந்து, கறிவேப்பிலை – தாளிக்கத் தேவையான அளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)
இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிதளவு
எண்ணெய் – 3 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
**எப்படிச் செய்வது?**
வரகை இருபது நிமிடங்கள் ஊறவிட்டுக் களைந்து தண்ணீரை வடித்துவைக்கவும். பிறகு இதனுடன் 200 மில்லி பால் மற்றும் 400 மில்லி தண்ணீர் சேர்த்து குக்கரில் நான்கு விசில் வரும்வரை வேகவிடவும். ஒரு வாணலியைச் சூடாக்கி, எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளிக்கவும். இதனுடன் பெருங்காயத்தூள், இஞ்சித் துருவல், பச்சை மிளகாய் சேர்த்துப் புரட்டி இறக்கவும். இதை வேகவைத்துள்ள சாமை சாதத்தில் சேர்த்து நன்கு கிளறவும் (சாதம் இறுகலாக இருப்பின் கொஞ்சம் வெந்நீர் அல்லது பால் ஊற்றி, சற்று நெகிழ்வாகக் கலந்துகொள்ளலாம்). கூடவே தேவையான அளவு உப்பு சேர்த்து மறுபடியும் கிளறவும். பின்னர் இதனுடன் தயிர் சேர்த்துக் கிளறவும். கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
**குறிப்பு**
லஞ்சுக்கு, பயணங்களுக்கு, எடுத்துச் செல்லும்போது ஒரு ஸ்பூன் தயிர் மட்டும் சேர்த்துக் கலந்து எடுத்துச் செல்லலாம். சாப்பிடும்போது புளித்துவிடாமல் சுவையாக இருக்கும். விருப்பப்பட்டால் கேரட் துருவல், மாதுளை முத்துகளைச் சேர்த்தும் பரிமாறலாம்.
**[நேற்றைய ரெசிப்பி: வரகு தேங்காய் சாதம்](https://minnambalam.com/public/2022/01/05/1/coconut-rice)**
.�,