கறிக்கோழி பண்ணைகளுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஒப்புதல் பெற வேண்டும் என புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு உற்பத்தியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பல்லடம், சுல்தான்பேட்டை, பொள்ளாச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல் உட்பட பல இடங்களில் சுமார் 25,000 கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இங்கு தினமும் சராசரியாக உற்பத்தி செய்யப்படும் 15 லட்சம் கறிக்கோழிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உட்பட பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. பண்ணை கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு (பிசிசி) மூலம் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு கடந்த 2021ஆம் ஆண்டு வழங்கிய உத்தரவுபடி திருத்தப்பட்ட கோழி பண்ணைகளுக்கான சுற்றுச்சூழல் வழிகாட்டுதல்களை ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிட்டது. இது அனைத்து வகை கோழிப்பண்ணைக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி ஒரே இடத்தில் 5,000 முதல் 25,000 வரையிலான கோழிகளை வளர்க்கும் பண்ணைகள் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் இசைவாணை (ஒப்புதல்) பெற வேண்டும் என்று தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இது உற்பத்தியாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள உற்பத்தியாளர்கள், “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் கறிக்கோழி வளர்ப்பு தொழில் செயல்பட்டால் சாதகத்தைவிட பாதகமே அதிகம் ஏற்படும். இதுகுறித்து கறிக்கோழி உற்பத்தியாளர்கள், பண்ணை உரிமையாளர்கள் ஆகியோருடன் கருத்து கேட்டு அதற்கேற்ப விதிமுறைகளை வகுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரும்பாலான பண்ணையாளர்கள் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் கறிக்கோழி வளர்ப்பு தொழிலுக்கு வந்துள்ளனர். நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் கறிக்கோழி தொழிலை விவசாயத் தொழிலாக கருதி அதற்கான சலுகைகளை அரசு வழங்க வேண்டும்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.
**-ராஜ்**
.