கொரோனா முடிந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக்கொண்டிருந்த நிலையில், விலை உயர்வால் புதுப்புது பிரச்சினைகள் வந்த வண்ணம் உள்ளது.
டீசல் விலை குறைவாக இருந்ததால் எப்பொழுதுமே நடுத்தர மக்களுக்கு தங்கள் பொருளாதார வாழ்கையில் டீசல் வண்டிகள் ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. ஆனால் தற்பொழுது பெட்ரோல் விலையை தொடர்ந்து டீசலும் 100 ரூபாயை தொட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
டீசல் விலை உயர்வு எதிரொலியாக கடலில் சென்று மீன்பிடிக்க விசைப்படகு உரிமையாளர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனால் மீன்கள் விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் மீன்கள் விலை சுமார் ரூ.100 முதல் ரூ.200 வரை உயர்ந்திருக்கின்றன.
டீசல் விலை உயர்வு காரணமாக சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் செல்லும் விசைப்படகுகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. தற்போதைய சூழலில் 10 முதல் 20 சதவீத விசைப்படகுகளே கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றன. விடுமுறை நாளான நேற்று காசிமேட்டில் மக்கள் கூட்டம் நிறைவாக இருந்தபோதிலும், குறைந்த அளவிலேயே விசைப்படகுகள் மீன்பிடிக்கச் சென்று திரும்பின.
தற்போதைய சூழலில் இந்த நிலை இன்னும் நீடிக்கும் பட்சத்தில் கடலுக்கு செல்லும் விசைப்படகுகள் எண்ணிக்கை இன்னும் குறையும் அபாயம் உள்ளது. மீன்பிடி தடைக்காலம் வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. எனவே மீன்கள் விலை வெகுவாக உயர வாய்ப்புள்ளது.
நாடு முழுவதும் விலை ஏற்றம் என்பது பொருளாதார வீழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. இதே நிலைமை தொடர்ந்தால் நமது நாட்டின் பொருளாதாரம் இலங்கையை போல ஆகிவிடும் என்று பல அமைச்சர்கள் கூறிவருகின்றனர்.
இதற்கிடையில், சென்னையில் விலை உயர்வால் ஹோட்டலிலும் விலை உயர்வு சற்று நாட்களில் வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.