cஇன்று முதல் தனியார் பால் விலை உயர்வு!

Published On:

| By Balaji

நாட்டில் பொருளாதார மந்த நிலை நிலவி வரும் நிலையில் ஏற்கெனவே சமையல் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் தற்போது தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்தியுள்ளன.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆவின் நிறுவனம் மூலம் விநியோகிக்கப்படும் பால், தயிர், நெய் உள்ளிட்ட பொருட்களின் விலை கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டது. அப்போதே தனியார் நிறுவனங்களும் தங்களது பால் விலையை உயர்த்தின. இது சாமானிய மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது தனியார் நிறுவனங்கள் மீண்டும் பால் விலையை உயர்த்தியுள்ளன.

ஆரோக்யா, டோட்லா, ஹெரிடேஜ் ஆகிய நிறுவனங்கள் லிட்டருக்கு 2 ரூபாய் முதல் 4 ரூபாய் வரை விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இந்தப் புதிய விலை நிர்ணயம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இதன் மூலம் சமன்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு 45 ரூபாயிலிருந்து 50 ரூபாயாகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு 52 ரூபாயிலிருந்து 56 ரூபாயாகவும், கொழுப்புச்சத்து செறிவூட்டப்பட்ட பால் லிட்டருக்கு 60 ரூபாயிலிருந்து 62 ரூபாய் எனப் பால் விலை உயர்த்தப்பட்டு உள்ளன. இதற்குப் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இந்த விலை உயர்வுக்குப் பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மூன்று முறை லிட்டருக்கு ரூபாய் 8 வரை பால் மற்றும் தயிர் விலை உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. பால் கொள்முதல் விலை உயர்வு மற்றும் தமிழகத்தில் பால் தட்டுப்பாடு ஆகியவற்றைத் தனியார் நிறுவனங்கள் விலை உயர்வுக்குக் காரணமாகக் கூறுகின்றன. எனவே இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு விலை உயர்வைத் தடுத்து நிறுத்த வேண்டும். அனுமதி இன்றி யாரும் பால் விலையை உயர்த்தக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அதே நேரத்தில் பால் விலை உயர்வுக்கு பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். விலை உயர்வால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை என்று மாடு வளர்க்கும் விவசாயிகளும் கவலை தெரிவிக்கின்றனர்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share