தமிழகத்தில் அந்தந்த மாவட்டத்துக்குள்ளே பேருந்துகள் இயங்க அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், நாளை தனியார் பேருந்துகள் இயக்கப்படாது என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், நேற்று தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. இதில் மாவட்டத்துக்குள் மட்டும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கியது. அரசு பேருந்துகளை இயக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தனியார் பேருந்துகள் இயக்கப்படமாட்டாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாகத் தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாவட்டத்திற்குள் மட்டுமே இயக்கினால் லாபம் கிடைக்காது, பேருந்தில் உள்ள இருக்கைகள் அனைத்தையும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை தனியார் பேருந்துகள் இயங்காது” என்று தெரிவித்துள்ளனர்.
தனியார் பேருந்துகள் உரிமையாளர்கள் சங்க மாநில செயலாளர் தருமராஜ் கூறுகையில், “தமிழகத்தில் தனியார் பேருந்துகள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதி அளிக்க வேண்டும். மாவட்டத்துக்குள்ளேயே இயக்க வேண்டும் என்றால் 80 சதவிகித பேருந்துகள் ஓடாது. எனவே மாவட்டம் விட்டு வெளியே இயக்க அனுமதி கிடைத்தால் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும். மேலும், பேருந்துகளில் உள்ள 55 இருக்கைகளுக்கும் பயணிகளை ஏற்ற அனுமதிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதுபோன்று கடந்த 5 மாதங்களாக பேருந்துகளை இயக்காத நிலையில், அந்த நாட்களுக்கான வரியை ரத்து செய்ய போக்குவரத்துத் துறை அமைச்சரிடமும், அரசிடமும் கோரிக்கை வைக்கவுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
**-கவிபிரியா**�,