சேலத்திலிருந்து ஈரோடு நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து இன்று (மார்ச் 13) விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.
சேலம் அயோத்தியாபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல். இவர் இன்று சேலத்திலிருந்து ஈரோட்டை நோக்கி எஸ்.பி.பி.டி என்ற தனியார் பேருந்தை இயக்கிச் சென்றார். சங்கரியை அடுத்த அக்கமாபேட்டை பகுதியில் சென்றுகொண்டிருக்கும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்திலிருந்த தென்னை மரத்தில் மோதி பள்ளத்தில் இறங்கி விபத்தில் சிக்கியது.
அந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். பேருந்திலிருந்த பயணிகள் கத்தியதும், அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனே சென்று காயமடைந்தவர்களை மீட்கத் தொடங்கினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த கணேசன் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். சங்ககிரி அருகே பழைய எடப்பாடி சாலை பகுதியைச் சேர்ந்த இவர் திருமணத்துக்கு மேளம் வாசிப்பவர் ஆவார். மேலும் விபத்தில் சிக்கியவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்தில் சிக்கிய பேருந்தை கிரேன்கள் மூலம் மீட்டு போலீசார் அப்புறப்படுத்தினர். விபத்து தொடர்பாக சங்ககிரி காவல் ஆய்வாளர் ஆர்.தேவி விசாரணை செய்து வருகிறார்.
**-பிரியா**