தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆளாகும் தமிழக மீனவர்கள்!

Published On:

| By Balaji

எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதையும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதையும் இலங்கை கடற்படை வாடிக்கையாக வைத்துள்ளது. இந்த நிலையில், கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் பகுதியை சேர்ந்த நாகமணி என்பவருக்கு சொந்தமான பைபர் படகில், அதே ஊரைச் சேர்ந்த நாகமுத்து (44), பன்னீர்செல்வம் (48), ராஜேந்திரன் (54) ஆகிய மூன்று பேரும் நேற்று நள்ளிரவில் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரைக்கு தென் கிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களின் படகில் அத்துமீறி ஏறி அவர்களை இரும்புகம்பியால் கடுமையாக தாக்கி கடலில் தள்ளிவிட்டனர்.

படகில் இருந்த 200 கிலோ வலை, செல்போன், எக்கோ சிலிண்டர் ஒன்று, வாக்கிடாக்கி, ஜிபிஎஸ், 10 லிட்டர் டீசல் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.

காயத்துடன் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களை பார்த்த சக மீனவர்கள் அவர்களை மீட்டு ஆறுகாட்டுத்துறை கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.

இதையடுத்து இன்று காலை 108 ஆம்புலன்ஸ் மூலம் மூவரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மீனவர்களை தாக்கியது இலங்கை கடற்கொள்ளையர்களா என்று தெரியவில்லை. இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் நாகை, வேதாரண்யத்தை சேர்ந்த மேலும் 8 மீனவர்களை கடற்கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர் என்ற செய்தியும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share