ஹாங்காங்கில் பத்திரிகை சுதந்திரத்தை ஆதரித்து, செய்தித்தாள்களை வாங்கி குவித்து பத்திரிகைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் அங்குள்ள மக்கள்.
ஹாங்காங்கில் நெக்ஸ்ட் டிஜிட்டல் என்ற நிறுவனம் சார்பில் ஆப்பிள் டெய்லி என்கிற தினசரி செய்தித்தாள் பிரசுரமாகி வருகிறது. இந்தச் செய்தித்தாளில் சீனாவின் ஆளும் கம்யூனிஸ்டு கட்சிக்கு எதிராகவும், அதன் தலைவர்களின் சர்வாதிகாரப் போக்கை விமர்சித்தும், ஹாங்காங்கில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் கட்டுரைகளும் செய்திகளும் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆப்பிள் டெய்லி பத்திரிகையின் நிறுவனரான 72 வயதான ஜிம்மி லாய் மற்றும் அவருடைய இரண்டு மகன்களை ஹாங்காங் போலீஸார் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 10ஆம் தேதி கைதுசெய்தனர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹாங்காங் போலீஸாரின் இந்த நடவடிக்கை, பத்திரிகை சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் ஹாங்காங்கில் பத்திரிகை சுதந்திரத்தை ஆதரிக்கும் விதமாக மக்கள் ஆப்பிள் டெய்லி செய்தித்தாளை வாங்கி குவிக்க தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக ஆப்பிள் டெய்லி செய்தித்தாளின் விற்பனை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
ஹாங்காங்கில் செய்தித்தாள் விற்பனை செய்துவரும் ஒருவர் இதுகுறித்து கூறுகையில் “ஒரு நாள் முழுவதும் எனக்கு 100 செய்தித்தாள்களுக்கும் குறைவாகவே விற்பனை இருக்கும். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக அதிகாலையிலேயே 300 செய்தித்தாள்கள் விற்று தீர்ந்து விட்டன. ஒரே நபர் இரண்டுக்கும் மேற்பட்ட செய்தித்தாள்களை வாங்கி செல்வதையும் பார்க்க முடிகிறது” என்று கூறியுள்ளார்.
**-ராஜ்**�,