இந்தியாவில் ஆந்திராவில் அதிக அளவு பண்ணை இறால் உற்பத்தி நடைபெறுகிறது. அசைவ உணவு கடைகளில் பெரிய அளவில் உள்ள இறாலின் விலை சற்று அதிகம் என்றாலும் விரும்பி வாங்குவார்கள். நலங்களை அள்ளித்தரும் இறாலைக்கொண்டு பொதுவாக ஃப்ரை, தொக்கு, குழம்பு ஆகியவற்றை மட்டுமே செய்வது வழக்கம். இன்று இறால் மிளகு வறுவல் செய்து குடும்பத்தினரை அசத்துங்கள்.
**என்ன தேவை?**
இறால் – கால் கிலோ (சுத்தம் செய்தது)
பூண்டு – 6 பற்கள் (பொடியாக நறுக்கியது)
மிளகு – 15
கறிவேப்பிலை – சிறிதளவு
பச்சை மிளகாய் – 3
தேங்காய் எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
இறாலைச் சுத்தம் செய்து தண்ணீர் விட்டு நன்கு அலசிவிட்டு சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்தும் பிசிறி, அரை மணி நேரம் ஊற விடவும். பிறகு, ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் ஊற வைத்த இறால் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து தீயைக் குறைத்து வதக்கி, மூடி போட்டு வேகவிடவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. இறாலில் இருந்து வெளிவரும் தண்ணீரே போதுமானது. இறால் நன்கு வெந்ததும், மிளகை ஒன்றிரண்டாகப் பொடித்து தூவி நன்கு புரட்டி இரண்டு நிமிடம் விட்டு இறக்கவும்.
**[நேற்றைய ஸ்பெஷல்: இறால் மசாலா](https://minnambalam.com/public/2021/03/03/5/prawn-masala)**
.
.�,