Xகிச்சன் கீர்த்தனா: இறால் குழம்பு

Published On:

| By Balaji

இறாலில் நிறைந்துள்ள கொழுப்பு, நல்ல கொலஸ்ட்ரால் வகையைச் சேர்ந்தது. கூந்தல் உதிர்வைத் தடுப்பதிலும் இறாலுக்குப் பங்குண்டு. இறாலிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் பலவிதங்களிலும் நலம் பயப்பவை. இவை மட்டுமல்ல… பார்வைச் சிதைவைத் தடுப்பதிலும், மூப்புத் தோற்றத்தைத் தள்ளிப்போடுவதிலும், எலும்பு ஆரோக்கியத்திலும்கூட இறால்கள் பெரிதும் பங்காற்றுகின்றன. இந்த இறால் குழம்பு, சூடான சாதத்துக்கு ருசியாக இருக்கும். டிபனுக்கும் ஏற்றதாக அமையும்.

**என்ன தேவை?**

இறால் – கால் கிலோ

முருங்கைக்காய் – ஒன்று

வாழைக்காய் – ஒன்று (சிறியது)

சின்ன வெங்காயம் – 100 கிராம்

தக்காளி – ஒன்று

பூண்டு – 5 பற்கள்

சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) – 3 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்

வெந்தயம் – அரை டீஸ்பூன்

தேங்காய்த்துருவல் – 10 டீஸ்பூன்

சோம்பு – ஒரு டீஸ்பூன்

புளி – எலுமிச்சை அளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

பச்சை மிளகாய் – 2

உப்பு – தேவையான அளவு

**எப்படிச் செய்வது?**

தோலுரித்து சுத்தம் செய்யப்பட்ட இறாலைத் தண்ணீரில் அலசி வைக்கவும். முருங்கைக்காய், வாழைக்காய், பாதியளவு சின்ன வெங்காயம், தக்காளி எல்லாவற்றையும் விருப்பப்பட்ட வடிவத்துக்கு நறுக்கி வைத்துக் கொள்ளவும். புளியைக் கரைத்து வைக்கவும். தேங்காய்த்துருவல் மற்றும் சோம்பை மிக்ஸியில் ஒன்றாகச் சேர்த்து அரைத்து, இறுதியாக மீதமுள்ள சின்ன வெங்காயத்தையும் சேர்த்து ஒரு சுழற்று சுழற்றி வைக்கவும். பூண்டுப்பற்களை ஒன்றிரண்டாகத் தட்டி வைக்கவும். கரைத்து வைத்த புளிக்கரைசலில் சாம்பார் பொடி, மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள் தூள், உப்பு, அரைத்த தேங்காய்க் கலவை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து வைக்கவும். பிறகு, ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். பிறகு இரண்டாக கீறிய பச்சை மிளகாய், தட்டிய பூண்டு, நறுக்கிய தக்காளி, சின்னவெங்காயம் சேர்த்து வதக்கி பிறகு முருங்கைக்காய், வாழைக்காய் சேர்த்து வதங்கும்போதே இறாலையும் சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் கரைத்து வைத்துள்ள புளி, தேங்காய் குழம்புக்கலவையை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். குழம்பில் உள்ள காய்கள், இறால் வெந்ததும் இறக்கினால், இறால் குழம்பு ரெடி.

**[நேற்றைய ஸ்பெஷல்: இறால் எக் ரைஸ்](https://minnambalam.com/public/2021/03/01/1/prawn-egg-rice)**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share