கிச்சன் கீர்த்தனா: கொண்டைக்கடலை – இறால் வறுவல் புலாவ்!

Published On:

| By Balaji

கொஞ்சம் புதிதாகவும் வேண்டும், பழகிய சுவையிலும் இருக்க வேண்டும் என விரும்புவோர் நம்மில் பலருண்டு. அவர்கள் இந்த கொண்டைக்கடலை – இறால் வறுவல் புலாவை முயற்சி செய்து பார்க்கலாம். இந்த நாள் விருந்து உங்களுக்கு ஸ்வீட் அண்டு ஸ்பைசியாக அமையும்.

**இறால் வறுவல் செய்ய**

பொடியாக நறுக்கிய இறால் – 250 கிராம்

கொண்டைக்கடலை – அரை கப்

மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – அரை கப்

எண்ணெய் – தேவையான அளவு

**புலாவ் செய்ய:**

வேகவைத்த பாஸ்மதி அரிசி – ஒரு கப்

வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

பிரிஞ்சி இலை – ஒன்று

ஏலக்காய் – ஒன்று

பட்டை – ஒரு துண்டு

பெருஞ்சீரகம் – அரை டீஸ்பூன்

கீறிய பச்சை மிளகாய் – 2

காய்ந்த மிளகாய் – 2

நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் – ஒன்று

காய்ந்த மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லித்தழை – சிறிதளவு

மிளகாய் எண்ணெய் – 2 டீஸ்பூன் (டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்)

**எப்படிச் செய்வது?**

கொண்டைக்கடலையைக் கழுவி 6 மணிநேரம் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடித்து சற்று கொரகொரப்பாக மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். இதை ஒரு பாத்திரத்தில் மாற்றி, இத்துடன் இறால், மிளகாய்த்தூள், உப்பு, நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து, வடை மாவு பதத்துக்குப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து, ஒரு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து உருகியதும் மிளகாய் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். பிறகு பிரிஞ்சி இலை, ஏலக்காய், பட்டை, பெருஞ்சீரகம், பச்சை மிளகாய், காயந்த மிளகாய் சேர்த்து லேசாக வதக்கி, நீளமாக நறுக்கிய பெரியவெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். இத்துடன் காயந்த மிளகாய் விழுது, உப்பு மற்றும் எண்ணெயில் பொரித்த உருண்டைகளைச் சேர்த்து மெதுவாகக் கிளறிவிடவும். பிறகு வேகவைத்த பாஸ்மதி அரிசி சேர்த்துக் கிளறி, மீதம் இருக்கும் வெண்ணெயைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். இத்துடன் கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

**[நேற்றைய ரெசிப்பி: சிக்கன்-வால்நட் (அக்ரூட்) ஸ்பைஸி கிரேவி](https://minnambalam.com/public/2022/01/24/1/chicken-walnut-gravy)**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share