நாட்டின் சிறந்த 10 கூட்டுறவு வங்கிகளில் ஒன்றாக உள்ள பிஎம்சி எனப்படும் பஞ்சாப் & மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி, 6 மாநிலங்களில் 127 கிளைகளை வைத்துள்ளது. இந்த வங்கியில் மிகப் பெரிய மோசடி நடந்திருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.
அதாவது, ஹவுசிங் டெவலப்மெண்ட் மற்றும் இன்பிராஸ்ட்ரக்சர் லிமிடெட் என்ற கட்டுமான நிறுவனத்துக்கு பிஎம்சி, ரிசர்வ் வங்கியின் விதிகளை மீறி கடன் வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்த விசாரணையில் ரூ. 6,500 கோடி இந்த நிறுவனத்துக்குக் கடனாக வழங்கப்பட்டது தெரியவந்தது. இது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு மதிப்பை விட 4 சதவிகிதம் அதிகம் ஆகும். இந்த வங்கியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.8,800 கோடி என்ற நிலையில், அதில் 73 சதவிகிதம் அளவுக்கு இந்த நிறுவனத்துக்குக் கடன் வழங்கியிருப்பதும், அந்நிறுவனம் கடனை திருப்பி வழங்காததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து மும்பை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் இயக்குநர்கள் சர்ங் வாத்வான், ராகேஷ் வாத்வான், பிஎம்சி வங்கி தலைவர் வார்யம் சிங் ஆகியோரை கைது செய்தனர். முறைகேடாகக் கடன் வழங்குவதற்காக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி வங்கிக் கணக்குகள் தொடங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து பிஎம்சி வங்கி அடுத்த 6 மாதங்களுக்கு, கடன் வழங்குதல், சேமிப்பு கணக்குகளைத் தொடங்குவது என எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்று ரிசர்வ் வங்கி தடை விதித்தது. கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், இந்த வங்கியில் வைப்புத் தொகை வைத்திருப்பவர்கள் ரூ.1000க்கு மேல் எடுக்க முடியாது என்று தெரிவித்தது. இதையடுத்து ரூ,10,000 வரை எடுத்துக்கொள்ளலாம் என்று விதியை தளர்த்தியது. வைப்புத் தொகை வைத்திருப்பவர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து ரூ.25,000 வரை எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்தது.
பிஎம்சி வங்கியின் முறைகேடு தொடர்பாக, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் இதுவரை ரூ.3,830 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டதாக அமலாக்கத் துறை அக்டோபர் 13ஆம் தேதி தெரிவித்தது. இந்த சொத்துகள், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கும், அதன் தலைவர்கள், இயக்குநர்கள், பிஎம்சி வங்கியின் உயரதிகாரிகள் ஆகியோருக்கும் சொந்தமானவை என்று தெரிவித்தது.
இதற்கிடையே, நேற்று ரிசர்வ் வங்கி பிஎம்சியில் வைப்புத் தொகை வைத்திருப்பவர்கள், ரூ.40,000 வரை எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்தது. இதனால் 77சதவிகித வாடிக்கையாளர்கள் தங்கள் வைப்புகளை முழுமையாகத் திரும்பப் பெற முடியும் என்றும் தெரிவித்தது. எனினும், நேற்றைய தினம் மும்பை நீதிமன்றம் முன்பாக, வங்கியில் வைப்புத் தொகை வைத்திருந்த வாடிக்கையாளர்கள் கூட்டாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், ஓஷிவாராவில் வசித்து வந்த, சஞ்சய் குலாத்தி(51) என்ற முன்னாள் ஜெட் ஏர்வேஸ் ஊழியரும் பங்கேற்றார். போராட்டத்தில் தனது 80 வயது தந்தையுடன் பங்கேற்றார். சஞ்சய் குலாத்தி பிஎம்சி வங்கியில் ரூ.90 லட்சம் வைப்புத் தொகை வைத்திருந்தார். இவரது சேமிப்பு கணக்கு முடங்கியதால் மன அழுத்தத்துக்கு ஆளான சஞ்சய் குலாத்தி நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
�,”