கூலி உயர்வு கேட்டு விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் 15 நாட்களுக்கும் மேலாக நீடிப்பதால் ரூ.1,500 கோடி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐந்து லட்சம் தொழிலாளர்கள் வேலையை இழந்து உள்ளனர்.
கோவை மாவட்டத்தில் சோமனூர், கருமத்தம்பட்டி, சுல்தான் பேட்டை மற்றும் பல்வேறு பகுதிகளிலும், திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் மொத்தம் இரண்டு லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினமும் இரண்டு கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இவற்றின் மதிப்பு ரூ.100 கோடியாகும். இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஐந்து லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது.
விசைத்தறி உரிமையாளர்களுக்கு, ஜவுளி உற்பத்தியாளர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு வழங்கி வந்தனர். இந்த நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் கூலி உயர்வு வழங்கவில்லை. இந்த நிலையில், புதிய கூலி உயர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி சோமனூர் ரகங்களுக்கு 23 சதவிகிதம், இதர ரகங்களுக்கு 20 சதவிகிதம் கூலி உயர்வு வழங்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால், கூலி உயர்வு அமல்படுத்தாமல் ஜவுளி உற்பத்தியாளர்கள் இழுத்தடித்து வந்ததால் விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த 9ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தப் போராட்டம் 15 நாள்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதனால் இந்தத் தொழிலை நம்பியுள்ள ஐந்து லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், “கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் காரணமாக ரூ.1500 கோடிக்கு காடா துணிகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கூலி உயர்வு தொடர்பாக கடந்த 20ஆம் தேதி கோவை தொழிலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதையடுத்து வருகிற 27ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெற உள்ளது. அதிலும் உடன்பாடு ஏற்படவில்லையென்றால் எங்கள் போராட்டம் மேலும் பல இடங்களில் தொடரும்” என்று கூறியுள்ளனர்.
**-ராஜ்**
.�,