திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விசைத்தறியாளர்கள் கூலி உயர்வு பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என்று விசைத்தறியாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஒப்பந்தபடி கூலி உயர்வை அமல்படுத்தக்கோரி திருப்பூர், கோவை மாவட்டங்களில் விசைத்தறியாளர்கள் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விசைத்தறியாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படாததால் விசைத்தறிகள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என விசைத்தறியாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பேசியுள்ள திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கச் செயலாளர் பாலசுப்பிரமணியன், “வேலை நிறுத்தப் போராட்டம் காரணாக 5 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இதுவரை ரூ.3,100 கோடி மதிப்பிலான காடா துணி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் பல்லடம் ரகத்துக்கு 15 சதவிகிதம் , சோமனூர் ரகத்துக்கு 19 சதவிகிதம் என கூலி உயர்வு தருவதாகவும், பிறகு சுமார் நான்கு மாதங்கள் கழித்து மீண்டும் கூலி உயர்வு வழங்கப்படும் என இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் இதை ஒப்பந்தம் செய்து கொண்டு கையெழுத்து இடுவதில் ஜவுளி உற்பத்தியாளர்கள் முரண்பட்டதால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இந்தநிலையில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் கூலி உயர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.
**-ராஜ்**
.