வங்கியில் விசைத்தறியாளர்கள் வாங்கிய கடன் ரூ.65 கோடியைத் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர்களிடம் விசைத்தறியாளர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
பல்லடம் உயர் தொழில்நுட்ப நெசவு பூங்காவுக்கு ஆய்வு செய்யவந்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனை, திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறியாளர்கள் சங்கத் தலைவர் வேலுசாமி, செயலாளர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில், “திருப்பூர், கோவை மாவட்டத்தில் இரண்டரை லட்சம் விசைத்தறிகள் மூலம் ஐந்து லட்சம் தொழிலாளர் குடும்பங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வாழ்வாதாரம் பெறுகின்றனர். இவற்றில் 90 சதவிகித விசைத்தறிகள் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் கூலிக்கு நெசவு செய்யும் அடிப்படையில் இயங்குகின்றன.
ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து சிறு குறு விசைத்தறியாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை விசைத்தறி கூலி ஒப்பந்தம் மாவட்ட அமைச்சர்கள், கைத்தறி துணி நூல் துறை அமைச்சர், கலெக்டர்கள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஏற்படுத்தப்பட்டு ஜவுளி உற்பத்தியாளர்களால் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் 2014ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தக் கூலியானது கடந்த ஏழு ஆண்டுகளாக அமல்படுத்தப்படவில்லை. ஆனால் விசைத்தறியாளர்கள் தங்கள் தொழிலாளர்களுக்குக் கூலியை உயர்த்தி வழங்கி விட்டனர்.
மேலும், உதிரி பாகங்கள் விலை உயர்வு, உயர்த்தப்பட்ட மின் கட்டணம் என்று தொடர்ந்து அதிகரிக்கும் செலவுகளால் விசைத்தறியாளர்கள் பெரும் நஷ்டத்துக்கு உட்பட்டனர். எனவே 2021ஆம் ஆண்டுக்கான ஒப்பந்தக் கூலி உயர்வை ஏற்படுத்தி, அந்த உயர்த்தப்பட்ட கூலியை நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஒப்பந்தக் கூலி வழங்கப்படாததால் பெரும் நஷ்டத்தைச் சந்தித்த விசைத்தறியாளர்கள், வங்கியில் பெற்ற மூலதன கடனை திருப்பி செலுத்த முடியாமல் தங்கள் விசைத்தறிக்கூடம், வீடு முதலியவற்றை வங்கி ஏலத்தில் இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
மேலும், வங்கிகள் விசைத்தறியாளர் சொத்துகளை ஏலம் விடுதல், ஜப்தி செய்தல் முதலிய நடவடிக்கையில் இறங்கினர். தற்போது ஊரடங்கு காலத்திலும் வங்கியினர் ஏலம் மற்றும் ஜப்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
எனவே தாங்கள் முதலமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுசென்று சிறு குறு விசைத்தறியாளர்கள் வங்கியில் பெற்ற மூலதனக் கடன் ரூ.65 கோடியைத் தள்ளுபடி செய்ய வேண்டும். அதுவரையில் வங்கிகளின் ஏலம், ஜப்தி நடவடிக்கைளை நிறுத்திவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கோரியுள்ளனர்.
**-ராஜ்**
.�,