�அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றைத் தொடர்ந்து உலகில் நான்காவதாக அதிகம் பயிர் செய்யப்படும் தாவரம் உருளைக்கிழங்கே. பெரு நாடு உருளைக்கிழங்கின் தாயகம் என்றழைக்கப்படுகிறது. உருளைக்கிழங்கு விளைச்சலில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. கிழங்கு வகை உணவுகளில் மக்கள் அதிகம் உண்ணக்கூடிய உருளைக்கிழங்கில் தேங்காய்ப்பால் சேர்த்து இந்த மசாலா செய்து வீட்டிலுள்ளவர்களை அசத்தலாம்.
**என்ன தேவை?**
உருளைக்கிழங்கு – 3 (வேகவைத்து, தோல் நீக்கி மசிக்கவும்)
நறுக்கிய வெங்காயம் – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
தேங்காய்ப்பால் – ஒரு கப்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – முக்கால் டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
பட்டை – 2 சிறிய துண்டு
கடுகு – அரை டீஸ்பூன்
எண்ணெய் – 5 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, பட்டை, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துப் பச்சை வாசனை போக வதக்கவும் (தேவையானால் சிறிதளவு தண்ணீர் சேர்க்கலாம்). அதனுடன் தேங்காய்ப்பால் சேர்த்து நன்றாகக் கிளறவும். பிறகு, மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து வேகவிடவும். தேங்காய்ப்பால் நன்கு வற்றியதும் கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
**[நேற்றைய ஸ்பெஷல்: சண்டே ஸ்பெஷல் – வேண்டியவை… வேண்டாதவை!](https://minnambalam.com/public/2021/03/21/1/Sunday-special-needed-and-not-needed)**
.�,