r8 லட்சம் டிரைவர்களால் ஓட்டுப்போட முடியுமா?

Published On:

| By Balaji

வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு தபால் வாக்கு வசதியை ஏற்படுத்துவது நடைமுறைக்கு சாத்தியமற்றது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தின் செயலாளர் ஜூட் மேத்யூ சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், சட்டமன்றத் தேர்தலில், தேர்தல் அதிகாரிகளை அழைத்துச் செல்லும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கெண்டு செல்லும் வாடகை வாகன ஓட்டுநர்களும், பால், குடிநீர், காய்கறிகள், பெட்ரோல், டீசல் போன்ற அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் வாகன ஓட்டுநர்களும் தங்களது வாக்குகளை செலுத்த முடிவதில்லை.

வாக்களிக்க தகுதியிருந்தும், பணி நிமித்தமாக 8 லட்சம் ஓட்டுநர்களால் வாக்களிக்க இயலவில்லை. நூறு சதவீத இலக்கை மையமாக கொண்டு செயல்படும் தேர்தல் ஆணையம், வாக்களிக்க இயலாதவர்களை அடையாளம் கண்டு அவர்களையும் வாக்களிக்க செய்வதற்கு எந்த நடைமுறையும் ஏற்படுத்தவில்லை.

எங்களுக்கு தபால் வாக்கு வசதி கேட்டு அளித்த மனுவும் பரீசிலிக்கபடவில்லை. அதனால், ஜனநாயக கடமையை செய்வதற்கு எங்களுக்கு தபால் வாக்கு வசதியை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு வந்தது. அரசு ஓட்டுநர்களுக்கு தபால் வாக்குகள் அளிக்கும் வசதி இருப்பதாகவும், வாடகை வாகன ஓட்டுநர்கள் தனியார் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஏப்ரல் 6ல் தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்குள் வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க அனுமதிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமற்றது என நீதிபதிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக மனுதாரர் அளித்த மனுவை பரீசிலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இவ்வழக்கை முடித்து வைத்தனர்.

**வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share