hகிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் கஞ்சி

Published On:

| By Balaji

ஞாயிற்றுக்கிழமை, விடுமுறை நாள்தானே என்று அன்று படுக்கையை விட்டு எழ தாமதமாகிறது. ஆனால், விழித்துக்கொண்ட கொஞ்ச நேரத்தில் வீட்டிலுள்ளவர்களுக்குப் பசி எடுத்துவிடுகிறது. இப்படிப்பட்ட நேரத்தில் உடனடியாக டிபன் செய்ய முடியாத சூழ்நிலையில் சத்தான ஓர் உணவு இருந்தால் சிறப்பு என்று நினைப்பவர்களுக்கு இந்த ஹெல்த்தி கஞ்சி உதவும்.

**இதற்கு என்ன தேவை?**

பச்சரிசி – அரை கப்

பயத்தம்பருப்பு – 4 டேபிள்ஸ்பூன்

வெந்தயம் (வறுத்து, கொரகொரப்பாகப் பொடித்தது) – அரை டீஸ்பூன்

பூண்டு – 4 பல் (நறுக்கவும்)

பச்சை மிளகாய் – ஒன்று

சின்ன வெங்காயம் – 4 (நறுக்கவும்)

பெரிய வெங்காயம் – பாதியளவு (நறுக்கவும்)

கேரட் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்

நறுக்கிய புதினா, கொத்தமல்லி இலைகள் – தலா ஒரு டேபிள்ஸ்பூன்

தேங்காய்ப்பால் – அரை கப்

தக்காளி – ஒன்று (நறுக்கவும்)

உடைத்த முந்திரித் துண்டுகள் – ஒரு டேபிள்ஸ்பூன்

பட்டை – ஒரு சிறிய துண்டு

கிராம்பு – 2

எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

**எப்படிச் செய்வது?**

அரிசி, பருப்பைக் கழுவிக்கொள்ளவும். குக்கரில் எண்ணெய்விட்டு பட்டை, கிராம்பு, முந்திரித் துண்டுகள் சேர்த்து வதக்கி, பச்சை மிளகாயை நறுக்காமல் லேசாக முழுதாகக் கீறிப் போட்டு வதக்கவும். இதனுடன் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி, பூண்டு, கேரட் துருவல், வெந்தயம், உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு அரிசி, பருப்பு சேர்த்து, நான்கு கப் நீர்விட்டு தக்காளி, புதினா, கொத்தமல்லி இலைகள் சேர்ந்து குக்கரை மூடி இரண்டு விசில் வரும் வரை வேகவிடவும். குக்கரில் பிரஷர் அடங்கியதும் திறந்து, தேங்காய்ப்பால் ஊற்றிக் கலந்து ஒரு கொதிவிட்டு இறக்கவும். சத்தான சண்டே ஸ்பெஷல் கஞ்சி தயார்.

மதிய உணவுக்கு தாமதமாகும் சூழ்நிலையில் நீண்ட நேரம் பசி தாங்கக்கூடியதாகவும் இந்தக் கஞ்சி இருக்கும்.

**[நேற்றைய ரெசிப்பி: அசோகா அல்வா!](https://minnambalam.com/public/2021/12/11/1/asoka-halva)**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share