பூண்டி சீரமைப்பு பணியில் தாமதம்… சென்னை பாதிக்கப்படுமா?

Published On:

| By admin

கோடையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் சேதமடைந்த கிருஷ்ணா நதி நீர் கால்வாயின் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்குத் தண்ணீர் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையின் குடிநீர் தேவைக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக அரசு ஆந்திர அரசுடன் 1983ஆம் ஆண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தை வகுத்தது. அதன்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வருடந்தோறும் 12 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீரும் வழங்க வேண்டும்.
இதற்காக கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரி வரை 177 கிலோமீட்டர் தூரத்துக்கு கால்வாய் வெட்டப்பட்டது. இந்தக் கால்வாய் ஆந்திராவில் 152 கிலோ மீட்டர் தூரம், தமிழகத்தில் 25 கிலோமீட்டர் தூரம் உள்ளது. அதாவது தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோமீட்டர் தூரத்துக்கு கால்வாய் உள்ளது. இதன் பணிகள் 1984ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1995இல் முடிக்கப்பட்டது. பின்னர் 1996ஆம் ஆண்டு முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் கடந்த வருடம் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் பெய்த பலத்த மழைக்கு கால்வாயில் தண்ணீர் சீறிப்பாய்ந்ததால் தாமரைகுப்பம் ஜீரோ பாயின்ட்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோமீட்டர் தூரத்திற்கு கிருஷ்ணா நதி கால்வாயில் பல இடங்களில் கரை சேதம் அடைந்தது.
இந்த சேதமடைந்த கால்வாயைச் சீரமைக்க தமிழக அரசு ரூ.24 கோடி நிதி ஒதுக்கியது. ஈரோட்டை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் கால்வாய் சீரமைக்கும் பணிகள் ஒப்படைக்கப்பட்டது. முதல் கட்டமாக ஊத்துக்கோட்டை அருகே உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் இருந்து ஆலப்பாக்கம் வரை 6.20 கிலோமீட்டர் தூரம் கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணிகள் டிசம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாத கடைசியில் இரண்டு நாட்கள் கொட்டித் தீர்த்த மழையால் கிருஷ்ணா நதி கால்வாயில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால் கால்வாய் சீரமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகள் ஏப்ரல் மாதம் கடைசி வரை தொடர்ந்து நடைபெறும் என்று தெரிகிறது. இந்தப் பணியின் காரணமாக கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டிஎம்சி தண்ணீர் சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 31.81 அடியாக பதிவாகியது. தற்போது 2.193 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. கோடையின் தாக்கம் அதிகரித்து வரும்நிலையில் பூண்டி ஏரியின் நீர் இருப்பு போதுமானதாக இருக்குமா என்ற கவலை ஏற்பட்டுள்ளது. மேலும் சென்னையின் குடிநீர் தேவைக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

**-ராஜ்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share