பூண்டி ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்படுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இந்த பகுதிகளில் இருக்கும் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. குறிப்பாக, சென்னைக்குக் குடிநீர் தரும் 5 ஏரிகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன்காரணமாக தற்போது பூண்டி ஏரி தனது முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது.
35 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் மட்டம் 33.95 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஏரியிலிருந்து உபரி நீர் படிப்படியாகத் திறக்கப்பட உள்ளதாக பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.
பொதுப்பணித் துறை வெளியிட்ட அறிவிப்பில், “பூண்டி ஏரியின் கொள்ளளவு 33.95 அடியாகவும், 2807 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. பூண்டியில் நீர் வரத்துக் காலை 6.00 மணி நிலவரப்படி 1691 கன அடியாக உள்ளது. தற்போது பருவ மழையினால் நீர் வரத்துத் தொடர்ச்சியாக உயர்வதால் சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் அணையின் நீர் மட்டம் 34 அடியைத் தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் பிற்பகல் 2.00 மணி அளவில் விநாடிக்கு 1000 கன அடி உபரி நீர் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்திற்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகமாகும் நிலையில் கூடுதல் உபரி நீர் படிப்படியாகத் திறக்கப்படும் என முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.
எனவே, நீர்த்தேக்கத்திலிருந்து உபரி நீர் வெளியேறும் கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், தப்பை, எறையூர், பீமன் தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனூர், ஜெகநாதபுரம், புதுக்குப்பம், கன்னிப்பாளையம், வன்னியப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூர், சீமாவரம், வெள்ளிவாயல்சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணூர் மற்றும் கொசஸ்தலையாற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-பிரியா**
�,