அக்டோபர் 11 ஆம் தேதி சீன அதிபர் ஜீ ஜின் பிங்குடன் சந்திப்பு நடத்துவதற்காக, பிரதமர் மோடி தமிழ்நாடு வந்தார். அப்போது அவரை வரவேற்பதற்காக சென்னை விமான நிலையம் சென்ற தமிழக பாஜகவின் முக்கிய தலைவர்கள் பிரதமரைக் காண முடியாமல் புறக்கணிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக, [‘மோடியை வரவேற்பதில் கோஷ்டிப் பூசல்’](https://minnambalam.com/k/2019/10/11/39/modi-land-in-chennai-invite-bjp-group-clash) என்ற தலைப்பில் மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் அக்டோபர் 11 மதியம் 1 மணிப் பதிப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதாவது தமிழிசையின் ஆதரவாளர்கள் அனைவருக்கும் விமான நிலையம் சென்று பிரதமரை வரவேற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இது தொடர்பாக தமிழக பாஜகவின் அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ வினாயகம் மீதும், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீதும் பாஜக தலைவர் அமித் ஷாவுக்கும், செயல் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கும் புகார்களை தமிழிசை ஆதரவாளர்கள் அனுப்பி வைத்திருக்கிறார்கள். இதுமட்டுமல்ல, பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா இது தொடர்பாக அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ வினாயகத்திடம், “தமிழக பாஜகவுக்கு தலைவர் இன்னும் நியமிக்காத நிலையில், முக்கிய முடிவுகள் எல்லாம் உயர் மட்டக் குழு கூடிதான் எடுக்கப்பட வேண்டும். ஆனால் பிரதமரை வரவேற்பவர்கள் பட்டியலை எப்படி நீங்களும், பொன்.ராதாகிருஷ்ணனும் மட்டும் முடிவு செய்யலாம்? இதெல்லாம் தவறு. கட்சியில் உள்ளவர்களையே, பிரதமரை சந்தித்து வரவேற்க அனுமதிக்கவில்லையென்றால் மக்களிடம் நாம் எப்படி செல்ல முடியும்? இதுபற்றி நானே டெல்லியில் பேசப் போகிறேன்” என்று நேரடியாகவே சொல்லியிருக்கிறார். மேலும் பிரதமர் வரவேற்பு நிகழ்ச்சியை சென்னை பெருங்கோட்டப் பொறுப்பாளர்கள்தான் கவனிக்க வேண்டும். ஆனால் முத்துப்பேட்டையைச் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர் கருப்பு முருகானந்தத்துக்கு இந்த பொறுப்பு அளிக்கப்பட்டது எப்படி என்றும் சீனியர்கள் கேசவ வினாயகத்திடம் கேட்டிருக்கிறார்கள்.
ஹெச்.ராஜாவுக்கும், பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் இதில் வேறொரு பழைய கணக்கு இருப்பதாகவும் கமலாலய வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்கள்.
“மத்திய அமைச்சராக இருந்தவரை பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கமலாலயத்தில் ஒரு பிரத்யேக அறை ஒதுக்கப்பட்டது. அவர் கடந்த தேர்தலில் தோற்றதும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை, ‘ கமலாலயத்தில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையை தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு கொடுக்கலாம்’ என்று பரிந்துரைத்தார். ஆனால் பொன்.ராதாகிருஷ்ணனோ பாஜகவில் இப்போது எந்த பொறுப்பிலும் இல்லாத நிலையிலும் கமலாலய அறையை காலி செய்ய மறுத்து வருகிறார்.
தேசிய செயலாளர் என்ற பொறுப்பில் இருக்கும் ராஜாவுக்கு கமலாலயத்தில் அறை இல்லை. ஆனால் இப்போது எந்த பொறுப்பிலும் இல்லாத பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஏன் அறை? டெல்லியில் தனது அறையை ஒரே நாளில் காலி செய்த பொன்.ராதாகிருஷ்ணன் கமலாலய அறையை மட்டும் காலி செய்ய மறுப்பது ஏன்? ” என்ற குமுறல் இப்போது தமிழிசை ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.
இந்த விஷயத்தில் பொன்.ராதாவுக்கு எதிராக ஹெச்.ராஜாவும், தமிழிசையின் ஆதரவாளர்களும் இணைந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதற்கு வேட்டி கட்டி, தமிழ்பேசி பிரதமர் மோடி பல்வேறு கவர்ச்சிகரமான காய் நகர்த்தல்களை மேற்கொண்டுள்ள நிலையில், பிரதமரை வரவேற்பதிலேயே இத்தனை கோஷ்டிகளா என தமிழக பாஜக மீது கோபத்தில் இருக்கிறது பாஜக தேசிய தலைமை.
�,