mபொன்முடி vs எ.வ.வேலு: ஸ்டாலின் யார் பக்கம்?

Published On:

| By Balaji

விக்கிரவாண்டி தேர்தல் களம் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரக் களத்தில் இறங்கிய பிறகு இன்னும் சூடாகியிருக்கிறது.

பிரச்சாரத்துக்கு வரும் முன்பே இத்தனை நாட்கள் தொகுதியில் ஒவ்வொரு பகுதி வாரியாக திமுகவினர் செய்திருக்கும் பணிகள் பற்றிய முழு ரிப்போர்ட்டையும் பொறுப்புக் குழுவிடமிருந்து வாங்கிப் பார்த்திருக்கிறார் ஸ்டாலின். பொறுப்பாளர்களுடனும் பேசியிருக்கிறார்.

பொதுவாகவே இடைத்தேர்தலானாலும் பொதுத் தேர்தலானாலும் தலைவர்களின் சுற்றுப் பயணம் முடிந்தபிறகுதான் ‘பணப்பட்டுவாடா ’தொடங்கும். தலைவர்களின் பிரச்சாரத்துக்குப் பிறகு மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை பல்ஸ் பார்த்து ஓட்டுக்கு எவ்வளவு கொடுப்பது என்ற முடிவுக்கு வருவார்கள். திமுக, அதிமுக இருகட்சிகளிலுமே இதுதான் நிலைமை.

அந்த வகையில் ஸ்டாலின் பிரச்சாரத்துக்குப் பின் பணப்பட்டுவாடாவை தொடங்க இருக்கிறது திமுக. வழக்கமாக மாவட்டச் செயலாளர் பொன்முடியிடம்தான் பணப்பட்டுவாடா பொறுப்புகள் வழங்கப்படும். பொன்முடி ஆதரவாளர்களும் அப்படித்தான் நினைத்திருந்தார்கள்.

ஆனால் தொகுதிக்கு வருவதற்கு முன்பே, பொன்முடியிடம் நிதி கையாளும் பொறுப்பை ஒப்படைக்க வேண்டாம் என்று ஸ்டாலினுக்கு சில புகார்கள் போயிருக்கின்றன. பூத் கமிட்டிக்கான பணத்தில் ஆரம்பித்து இப்போதைய அன்றாட தேர்தல் செலவு வரை பொன்முடி மீது அவர்கள் புகார்களை அடுக்கியிருக்கிறார்கள். இதையடுத்து ஸ்டாலின் தொகுதிக்கு வருவதற்கு முன்பாகவே பணப்பட்டுவாடா பொறுப்பை திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் எ.வ. வேலுவிடம் ஒப்படைத்துவிட்டதாக திமுகவின் நம்பகத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

”ஏற்கனவே பொன்முடிக்கும் வேலுவுக்கும் ஆகாது. இந்நிலையில் இப்போது பணம் கையாளும் பொறுப்பை வேலுவிடம் ஒப்படைத்திருப்பதால் பொன்முடி ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். ஆனால் தலைவரைப் பொறுத்தவரை அவருக்கும் வேலுவுக்குமான வேவ் லெங்க்த் க்ளியராக இருக்கிறது. இதனால் பணப்பட்டுவாடாவை வேலுவே பார்த்துக் கொள்ளட்டும் என்று முடிவெடுத்துவிட்டார். ஸ்டாலின் யார் பக்கம் என்று கேட்டால் தேர்தலில் வெற்றிபெற வேண்டியது கட்டாயம் என்ற நிலையில்தான் இந்த முடிவை எடுத்துள்ளார்” என்கிறார்கள் விழுப்புரம் மாவட்ட திமுக நிர்வாகிகள்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share