பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்ல நேற்று இரவு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் குவிந்துள்ளனர். அதிக கூட்டம் காரணமாக நீண்ட நேரம் காத்திருப்புக்குப் பின்னரே பேருந்துகள் கிடைத்ததாகப் பயணிகள் கூறுகின்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக போக்குவரத்துத் துறை சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கும், மற்ற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவித்தது. கோயம்பேடு மட்டுமின்றி, மாதவரம், பூந்தமல்லி, தாம்பரம் ரயில் நிலையம், மெப்ஸ் என 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டன.
ஜனவரி 11ஆம் தேதி முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்திருப்பதாகப் போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நேற்று இரவு கோயம்பேட்டில், பயணிகள் குவிந்துள்ளனர்.
அதோடு நேற்று குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டதாகவும், இதனால் நீண்ட நேரம் காத்திருந்ததாகவும் பயணிகள் கூறுகின்றனர். போதிய பேருந்துகள் இல்லாமல் விடிய விடியக் காத்திருந்ததாகத் தெரிவிக்கின்றனர். இதையடுத்து பேருந்து நிலையத்திலிருந்த அதிகாரிகளிடம் முறையிட்டதைத் தொடர்ந்து பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. மாநகரப் பேருந்துகள் வெளியூர்களுக்கு இயக்கப்பட்டுள்ளன.
ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு பேருந்துகளில் ஏறியதையும், படிக்கட்டுகளில் அமர்ந்து சென்றதையும் காண முடிந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பலரும் நேற்று சொந்த ஊருக்குத் திரும்பியதால் வாகன நெரிசல் காரணமாக கோயம்பேட்டுக்கு பேருந்துகள் வர தாமதமானதாகப் போக்குவரத்து வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
**-பிரியா**�,