zஇடைத் தேர்தல்: அதிமுக-பாஜக இடையே நடந்தது என்ன?

Published On:

| By Balaji

அதிமுகவிடம் நாங்குநேரி தொகுதியைக் கேட்கவில்லை என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுக கூட்டணியில் நாங்குநேரி தொகுதியை பாஜக கேட்பதாகவும், அதனை பொன்.ராதாகிருஷ்ணனின் பேட்டியே உறுதிப்படுத்துவதாகவும், [அதிமுக கூட்டணியில் நாங்குநேரியைக் கேட்கும் பாஜக](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/09/21/112/admk_bjp_nanguneri_byelection) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். ஆனால், இரு தொகுதிகளிலும் அதிமுகதான் போட்டியிடுகிறது. நாங்குநேரியில் நாராயணனும், விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ்ச்செல்வனும் போட்டியிடுவார்கள் என அதிமுக சார்பில் நேற்று அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு முழுமையாக பணியாற்றுவோம் என கூட்டணிக் கட்சிகளான பாமக, தமாகா ஆகியவை அறிவித்துவிட்டன. தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்தை அமைச்சர்கள் சந்தித்து ஆதரவு கோரியுள்ளதன் மூலம் தேமுதிகவின் ஆதரவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதிமுகவின் நெருங்கிய கூட்டணிக் கட்சியான பாஜக இதுவரை தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று (செப்டம்பர் 26) சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணனிடம், நாங்குநேரி தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, “நாங்குநேரி தொகுதியை கேட்பது தொடர்பாக பாஜகவின் சார்பில் இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. அதிமுகவிடம் நாங்குநேரி தொகுதியை கேட்டோம் என்பதெல்லாம் தவறான விஷயங்கள். இடைத் தேர்தல் தொடர்பாக எங்களுடைய அகில இந்திய தலைமை முடிவு செய்யும். அதன் அடிப்படையில்தான் மற்ற விஷயங்கள் அமையும். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் பாஜக ஆதரவளிக்கும் கட்சி அமோக வெற்றிபெறும்” என்று பதிலளித்தார்.

தமிழக பாஜக தலைவர் பொறுமையாக தேர்வு செய்யப்படுவார் எனவும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share