சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக இருக்கும் பொன்.மாணிக்கவேல் தனது பணி காலத்தை நீட்டிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக இருந்த பொன்.மாணிக்கவேலின் பதவிக்காலம் முடிந்ததை அடுத்து 2018இல் அவரை சிறப்பு அதிகாரியாகச் சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
அவரது பணி காலம் வரும் 30ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், பணி நீட்டிப்பு வழங்க வேண்டுமென உயர் நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் நேற்று (நவம்பர் 21) மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் தன்னைத் தவிர மீதமுள்ள 70 அதிகாரிகள், 132 கான்ஸ்டபிள்கள் என அனைவரும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் உள்ள 66 அதிகாரிகள்தான் தனக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள அவர் 2018 ஆகஸ்ட் முதல் 2019 மே வரை இப்பிரிவு முடங்கிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபியும், டிஜிபியும் விசாரணையில் தலையிடுவதாகவும் பணி செய்யவிடாமல் தடுப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை நிறைவு செய்யும் வரை சிறப்புக் குழுவின் பணி காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று மனுவில் கோரியுள்ளார்.
தமிழக அரசுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் தற்போது இந்த மனுவையும் தாக்கல் செய்துள்ளார்.�,