பொள்ளாச்சி பாலியல் ராக்கெட்: பொள்ளாச்சி ஜெயராமனுக்கு பிராக்கெட்?

Published On:

| By Balaji

‘பொள்ளாச்சி ஜெயராமன் அனைவரிடமும் அன்புடன் பழகும் தன்மை கொண்டவர். கட்சிப் பணிகள் மட்டுமின்றி மக்கள் நலப் பணிகளையும் சிறப்புடன் ஆற்றும் திறமை கொண்டவர். ஏழை, எளிய மக்களுக்கு உதவும் பாங்கினைக் கொண்டவர். நல்லவர், வல்லவர், படித்தவர், நல்ல அடக்க உணர்வுடன் எந்தப் பொருளையும் கூர்ந்து கவனித்து முடிவு எடுக்கும் தன்மை படைத்தவர்’.

இதெல்லாம் நாம் கொடுக்கும் பாராட்டு உரையில்லை. 2012 அக்டோபர் 29 அன்று துணைச் சபாநாயகராகப் பொறுப்பேற்றுக் கொண்ட அன்று, அவருக்கு அன்றைய முதல்வர் ஜெயலலிதா சூட்டிய புகழாரம். சட்டமன்றப் பதிவேட்டிலும் இந்த வார்த்தைகள் இன்றைக்கு இருக்கும். இன்று நடப்பதும் அம்மா ஆட்சிதான் என்று அதிமுகவினர் சொல்கின்றனர். ஆனால் ஐந்தாண்டுகளாக அம்மா புகழ்ந்தவருக்கு ஒரு அங்கீகாரமும் வழங்கப்படவில்லை. இதுதான் பொள்ளாச்சி ஜெயராமன் ஆதரவாளர்களின் பொருமலும் புலம்பலும்.

அதிமுக உடைந்தபோது அம்மாவின் பக்கம் நின்றவர் ஜெயராமன். தன் தந்தையின் பெயர் கொண்டவர் என்பதால் அவர் மீது ஜெயலலிதாவுக்கு தனிப்பற்றும் பாசமும் இருந்தது. அவரை அமைச்சராக்கி அழகு பார்த்ததற்கும் அது ஒரு காரணம். ஜெயராமன், அம்மா காலத்து ஆள் என்பதையும் விட எம்ஜிஆரின் அபிமானத்தைப் பெற்ற அரசியல்வாதி என்பதுதான் அவருக்கான தனி அடையாளம். கல்லூரி மாணவப் பருவத்திலேயே அரசியலுக்கு வந்து அதிமுகவின் அடிமட்டத்தொண்டனாய் பொதுவாழ்வைத் துவங்கியவர்.

ஜெயராமனுக்கு ஊர் பொள்ளாச்சி அருகிலுள்ள திப்பம்பட்டி. எம்ஜிஆர்தான் அவரை பொள்ளாச்சி ஜெயராமா என்று அழைக்க அதுவே அவருடைய பெயராக நிலைத்துப் போனது. பொள்ளாச்சியை அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக மாற்றியதில் அவருக்கு பெரும் பங்குண்டு. ஜெயலலிதா மறைவுக்குப் பின் எல்லாமே மறைக்கப்பட்டும் மறக்கப்பட்டும் விட்டது என்பதுதான் இவர்களின் குமுறல்.

ஜெயராமன் அமைச்சராக இருந்தபோது கேபிள் டிவி ஆபரேட்டராக இருந்தவர் உடுமலை ராதாகிருஷ்ணன். இருவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். பொள்ளாச்சி ஜெயராமன் சீனியர் என்பதால், அவரை ஓரம் கட்டி ராதாவை வளர்த்துவிட்டதில் சசிகலா வகையறாவை விடக் கொங்கு மண்டல அமைச்சர்கள் சிலருக்கே அதிகமான பங்கிருக்கிறது. ஆனாலும் கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற அமைதி காத்துவந்தார் ஜெயராமன். இப்போது அதற்கும் பங்கம் வருகிறது என்ற நிலையில்தான் அவரின் ஆதரவாளர்கள் கொதித்துக் கிடக்கிறார்கள். நெருக்கமானவர்களிடம் கொட்டித் தீர்க்கிறார்கள்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் ஜெயராமனின் மகன் பெயர் அடிபட்டது. அப்போது பொள்ளாச்சி எம்பியாக இருந்த மகேந்திரன், ஜெயராமனின் தீவிர ஆதரவாளர். அவர் இதை கடுமையாக மறுத்ததோடு, அன்றிருந்த கோயம்புத்தூர் காவல் கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்துவிட்டு, ‘‘இதில் ஆளுங்கட்சியினருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. அப்படியிருந்தால் அவர்களை தூக்குத்தண்டனை பெறுவதற்கு அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கும்’’ என்றார்.

இந்நிலையில்தான் கடந்த வாரத்தில், பொள்ளாச்சி நகர மாணவரணிச் செயலாளராக இருந்த அருளானந்தம், இந்த விவகாரத்தில் சிபிஐயால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கும், பொள்ளாச்சி ஜெயராமன் மகனுக்கும் தொடர்பு இருப்பதாகப் புகார் கிளம்பிய போதே அதை மறுத்த ஜெயராமன், இந்த விவகாரத்தைப் போலீசிடம் கொண்டு சென்றதே தான்தான் என்று ஊடகங்களிடம் உரக்கச் சொன்னார். அதை ஊடகங்கள் வெளியிட்டன. மக்கள் நம்பினார்களா என்று அப்போது தெரியவில்லை. ஆனால் அதற்குப் பின் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் கொங்கு பெல்ட்டில் அதிமுக பலத்த அடி வாங்க இந்த விவகாரமே காரணமென்று பெரிதாகப் பேசப்பட்டது.

அதில் கிடைத்த தோல்வி அதிமுகவையோ, ஜெயராமன் உள்ளிட்ட அதிமுகவினரையோ பெரிதாகப் பாதிக்கவில்லை. ஆனால் அதிமுகவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் சிபிஐ அதிமுக நிர்வாகியைக் கைது செய்திருக்கிறது. இப்போது ஜெயராமனின் மகனை இணைத்து மீண்டும் சர்ச்சைகளும் வதந்திகளும் ரெக்கை கட்டிப் பறக்கின்றன. அந்தத் தகவல்களுக்கு இடையில் இன்னொரு தகவலும் பரிமாறப்படுகிறது. அதாவது இந்த விவகாரத்தில் ஜெயராமனின் மகனுக்குத் தொடர்பு இருக்கிறது என்ற தகவல்தான் அது.

இது எதிர்க்கட்சியினரின் பொதுக்கூட்டத்திலும் போராட்டத்திலும் பேசிய விடயமாக இருந்தால் புறந்தள்ளி விட்டுப் போய்விடலாம். ஆனால் இதைப் பரப்பியதே ஆளும்கட்சியின் விஐபிதான் என்று அந்தத் தகவல் சொல்வதுதான் ஆளும்கட்சி வட்டாரத்தில் அதிர்வுகளையும், ஆச்சரியங்களையும் உண்டாக்கியிருக்கிறது. இந்தத் தகவல் ஆங்கிலத்தில் பரப்பப்படுகிறது என்பதுதான் முக்கியமான விஷயம். சிபிஐ வட்டாரத்திலிருந்தே இந்த தகவல் கசியவிடப்பட்டிருப்பதாக அதிமுகவினர் சந்தேகிக்கின்றனர்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அதிமுக நிர்வாகியைக் கைது செய்தவுடன் இந்த விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்தது திமுக தலைமை. கனிமொழி பொள்ளாச்சிக்கு வந்து போராட்டம் நடத்தினார். அதற்கு மறுநாளே அதிமுக பொதுக்கூட்டம் நடந்தது. அதில் அனைவரும் ஒன்று பட்டு திமுகவை எதிர்த்துப் பேசினாலும் உள்ளுக்குள் புகையும் பகை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதாகச் சொல்கிறார்கள் கோவை புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சிலர்.

நான்கு நாள்களுக்கு முன்புதான், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ‘தமிழகத்தின் ஆபிரகாம் லிங்கன்’ என்று புகழ்ந்து தள்ளியிருக்கிறார் பொள்ளாச்சி ஜெயராமன். அவருக்குப் பழனிச்சாமி, ஆபிரகாம் லிங்கனாகத் தெரியலாம். லிங்கன் ‘Our American Cousin’ என்ற நாடகத்தை அவர் ரசித்துக் கொண்டிருந்த போதுதான், ஜான் வில்கிஸ் என்ற நடிகனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அதிமுகவின் அதிதீவிர விசுவாசியான ஜெயராமனின் அரசியல் வாழ்வு என்ன ஆகும் என்பதே இப்போது கொங்கு பகுதியினரின் கேள்வி.

**–த.நிவேதா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share