திருச்சி மாநகர காவல் துறையில் பயன்படுத்தப்பட்ட 16 வாகனங்கள் 3 லட்சத்து 39, 080 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டு வசூலானது.
திருச்சி மாநகர காவல் துறையில் பயன்படுத்தப்பட்ட 16 வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படும் என்றும், இந்த ஏலத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி திருச்சி கே.கே.நகரில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் காவல் துறையில் பயன்படுத்தப்பட்ட கழிவு வாகனங்கள் பொது ஏலம் நடைபெற்றது.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு வாகனங்களை ஏலம் எடுத்தனர். ஏலம் நடைபெற்றதை மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், துணை கமிஷனர் முத்தரசு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதில் 13 இருசக்கர வாகனங்கள், ஒரு டெம்போ டிராவலர், 2 ஜீப்புகள் என மொத்தம் 16 வாகனங்கள் ஏலம் விடப்பட்டது. பின்னர் பொது ஏலத்தில் விடப்பட்ட வாகனங்களின் மொத்த விற்பனை தொகையான 3 லட்சத்து 39, 080 ரூபாய் (ஜிஎஸ்டி வரிகள் உட்பட) அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்று திருச்சி மாநகர காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட வாகனங்களை விருப்பமுள்ளவர்கள் பொது ஏலத்தில் எடுத்துக்கொள்ள தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
**-ராஜ்**
.