சில வாரங்களுக்கு முன்பு 21 வயதான தீபக் குமார் மற்றும் அவரது நண்பர்களை ஊரடங்கை மீறியதாகக் கூறி போலீசார் மடக்கினர். அவர்கள் அனைவரும் 144 தடை உத்தரவை மதிக்காமல் வில்லிவாக்கம் தெருக்களில் பைக்கில் ஜாலியாக ஊர் சுற்றிக்கொண்டிருந்ததால் அவர்களது பைக்குகளையும் பறிமுதல் செய்தனர். அத்தோடு, விதிமுறைகளை மீறிய அவர்களையே தன்னார்வலர்களாக மாற்றி கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதுபற்றி தீபக் குமார் கூறுகையில், “தினமும் காலை மாஸ்க், தன்னார்வலருக்கான பேட்ஜை அணிந்துகொண்டு ‘போலீஸ் டியூட்டி’ பார்க்கிறேன். சமூக சேவை செய்வது கூட ஜாலியாகத்தான் இருக்கிறது.என்று தெரிவிக்கிறார்.
பட்டதாரியான தீபக் குமாரும் அவரது ஐந்து நண்பர்களும் வில்லிவாக்கம் மார்கெட் மற்றும் ரேஷன் கடை பகுதிகளில் ஊரடங்கை மீறுபவர்களை கட்டுப்படுத்துவதில் காவல் துறையினருக்கு உதவியாக இருக்கிறார்கள். “பொதுமக்கள் மாஸ்க் அணிந்து வருகிறார்களா, கடைகளில் நிற்கும்போது சமூக இடைவெளியைப் பின்பற்றி தங்களுக்கு வரையப்பட்ட கட்டங்களில் நிற்கிறார்களா என்பதை நாங்கள் உறுதி செய்வோம்” என்கிறார் தீபக்.
போலீசாருக்கு உதவி செய்வது எனது பெற்றோருக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. எங்கள் தெருவில் உள்ளவர்கள் என்னிடம் பேசும்போது மரியாதையோடு நடந்துகொள்கிறார்கள். சொல்லப்போனால், எங்கள் தெருவில் உள்ள இளைஞர்கள் கூட என்னிடம், தாங்களும் காவல் துறைக்கு உதவுவதாக கூறுகிறார்கள். வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டிருப்பதற்கு பதிலாக சமூகத்திற்கு உதவுவதற்கு ஒரு வாய்ப்பாக இதனை பயன்படுத்திக்கொள்கிறேன் என்று கூறுகிறார் தீபக்.
இவரது நண்பரான விஜய்யின் பைக்கையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இவரும் போலீசாருக்கு உதவியாக பொதுமக்களை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். “பொதுமக்கள் நாங்கள் சொல்வதை கேட்கிறார்கள் என்பதை எங்களால் நம்ப முடியவில்லை” என்று அவர் கூறுகிறார். தீபக் காவல் துறைக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் தனது அம்மாவை தக்காளி, லெமன் சாதங்களை தயாரிக்கச் சொல்லி தினமும் காலை தான் பணியாற்றச் செல்லும் இடங்களில் இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு வழங்குகிறார்.
இதுபற்றி தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கும் முரளி ஆறுமுகம் கூறுகையில், “இளைஞர்கள் தங்களது பணியை மனமுவந்து செய்கிறார்கள். எங்களிடம் 20 தன்னார்வலர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஊரடங்கை மீறியதால் காவல் துறையினரால் பிடிக்கப்பட்டவர்கள். தற்போது, காவல் துறையுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றுகின்றனர்” என்கிறார்.
வில்லிவாக்கம் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பாபு, “இளைஞர்களுக்கு சரியான வழியைக் காட்ட ஒரு உந்துசக்தி தேவைப்படுகிறது. ஊரடங்கை மீறிய இளைஞர்களுக்கு சரியான பாதை காட்டப்பட்டதால், அவர்கள் தன்னார்வலர்களாக சரியான திசையை நோக்கி பயணிக்கிறார்கள்” என்று கூறினார்.
**எழில்**
தகவல்: டைம்ஸ் ஆப் இந்தியா�,”