மதுரை மத்தியச் சிறையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் இன்று (நவம்பர் 17) காலை அதிரடியாகச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள சிறைகளில் கைதிகள் சிலர், கஞ்சா, போதைப் பொருள் செல்போன் பயன்படுத்துவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டைத் தொடர்ந்து சிறைகளில் அதிகாரிகள் அதிரடியாகச் சோதனை நடத்துவதுண்டு. அதன்படி ஆயிரக்கணக்கானோர் அடைக்கப்பட்டுள்ள மதுரை மத்திய சிறையில் கைதிகள் தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட பொருட்களைப் பயன்படுத்துவதாக சிறைத்துறைக்கு தகவல் வந்துள்ளது. இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து இன்று அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை சரக சிறைத் துறை டிஐஜி பழனி தலைமையில், சிறைத் துறையின் உதவி ஆணையர் வேணுகோபால், ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் என 120 போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சிறை வளாகம், கழிவறைகள், கைதிகளின் அறைகள், சமையல் கூடம் என அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டுள்ளது.
காலை 5.50 மணிக்குத் தொடங்கிய சோதனை, காலை 8.45 மணிக்கு நிறைவு பெற்றது. ஒரு செல்போன், 2 சிம்கார்டுகள், தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பாக்கெட் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுபோன்று கடந்த மாதம் 19ஆம் தேதி சென்னை புழல் சிறையில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
�,