பண்டிகை காலத்தையொட்டி சென்னை நகர் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சென்னை போர் நினைவுச்சின்னம் அருகே நடைபெற்ற மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று(அக்டோபர் 24) தொடங்கி வைத்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால், பண்டிகை காலம் என்பதால் மக்கள் பொருட்கள் வாங்குவதற்காக பொது இடங்களில் அதிகளவில் கூடுவார்கள். அவ்வாறு வரும்போது கொரோனா கட்டுப்பாடு மற்றும் பிக்பாக்கெட், செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து காவல்துறை கண்காணித்து வருகிறது. கண்காணிப்பு கோபுரங்கள், ட்ரோன் உள்ளிட்டவை மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். Face Detection மூலம் 7,800க்கும் மேற்பட்ட திருடர்களை கண்காணிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.
அதுபோன்று சென்னை சாந்தோமில் காவேரி மருத்துவமனை சார்பில் நடைபெற்ற மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை இயக்குநர் கிருத்திகா உதயநிதி தொடங்கி வைத்தார். இதில் பாடகி அனுராதா ஸ்ரீராம் கலந்து கொண்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய கிருத்திகா உதயநிதி, மார்பக புற்றுநோயால் உயிரிழப்போர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுகுறித்தான விழிப்புணர்வு இருந்தாலே அச்சப்பட தேவையில்லை. பயத்தினால் பலரும் சோதனை செய்ய தயங்குகின்றனர். ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டால், அது உயிர்கொல்லி நோயாக மாறுவதற்கு வாய்ப்பு குறைவு. சிகிச்சை மூலம் எளிதில் குணமடைய வைக்கலாம். அதனால் தயக்கமின்றி அனைவரும் மார்பக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பெண்கள் மட்டுமில்லாமல் குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கும் போதிய விழிப்புணர்வு தேவை.இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும் காவேரி மருத்துவமனைக்கு எனது வாழ்த்துகள்” என்று கூறினார்.
**-வினிதா**
�,