ஆட்சியைப் பிடிக்கும் மந்திரம்: அன்புமணியிடம் மாற்றம்!

Published On:

| By Balaji

தற்போதுவரை அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமகவின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சியின் இளைஞரணிக் கூட்டத்தை நேற்று (நவம்பர் 23) சென்னை சேப்பாக்கத்தில் இருக்கும் அண்ணா அரங்கத்தில் நடத்தினார்.

மாநிலம் முழுதும் இருக்கும் அனைத்து மாவட்ட பாமக இளைஞரணி நிர்வாகிகள் அணிவகுத்த இந்தக் கூட்டத்தில் அன்புமணியின் பேச்சு வித்தியாசமானதாக இருந்தது. மாற்றம் முன்னேற்றம் என்ற முழக்கத்தை மீண்டும் கையிலெடுத்திருக்கிறார்.

கூட்டத்தில் பேசிய அன்புமணி, “இங்கே ஒவ்வொரு ஒன்றிய நிர்வாகிகளும் வந்திருக்கிறீர்கள். உங்களிடம் நான் ஒன்றே ஒன்றுதான் கேட்கிறேன். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் எனக்காக ஒரே ஒரு இளைஞரைத் தர வேண்டும். பாமகவின் கொள்கை புரிந்தவராக, வலிமையானவராக, விலைபோகாதவராக இருக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் ஒருவரை எனக்குத் தாருங்கள். தம்பிகளாகிய நீங்கள் இருக்கும் தைரியத்தில்தான் நான் களத்தில் நிற்கிறேன்.

நாம் இப்போது கூட்டணியில் இருக்கிறோம். உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிடுவதற்கு நமக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். கிடைக்கணும். அதேநேரம் தமிழகத்தில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் நம்மால்தான் நடத்திக் காட்ட முடியும். இதை யார், எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும். என்னிடம் பாமகவை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கான ஒரு மந்திரம் இருக்கிறது. அது என்ன மந்திரம் என்று இப்போது சொல்ல மாட்டேன். நேரம் வரும்போது கூறுகிறேன். எனவே மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் நாமே கொண்டுவருவோம்” என்று பேசியிருக்கிறார் அன்புமணி. பேச்சின் நிறைவில் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளையும் தனித்தனியே அழைத்து போட்டோ எடுத்திருக்கிறார்.

கடந்த சில நாட்களாகவே காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் முழுவதும் சென்று அன்புமணியின் முப்படைகளின் கூட்டத்தை நடத்திவருகிறார். அந்த ஒவ்வொரு கூட்டத்திலும் பாமக ஆட்சியைப் பிடிக்கும் என்றே சொல்லிவருகிறார்.

2021இல் அதிசயம் நிகழும் என்று ரஜினிகாந்த் கூறிய நிலையில், மீண்டும் அதிமுக ஆட்சியே மலரும் என்று பதில்கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அதேநேரம் அன்புமணி மீண்டும், ‘மாற்றம் முன்னேற்றம்’ முழக்கத்தை முன்னெடுப்பதை அதிமுகவும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, முரசொலி அலுவலகம் பஞ்சமி நில விவகாரம் பற்றிப் பேசும்போது, “திமுக வழக்கு தொடருவோம் என்று கூறியுள்ளதை வரவேற்கிறோம். காரணம், வழக்கு தொடரும் பட்சத்தில் நீதிமன்றத்திலாவது முரசொலி தொடர்பான பத்திரங்களை திமுக தாக்கல் செய்யும் என நாங்கள் நம்புகிறோம். கடந்த 19ஆம் தேதி நடந்த விசாரணையில் ஆவணங்கள் எதையும் தாக்கல் செய்யாத திமுக, தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தையே மிரட்டியுள்ளது. இதுதான் திமுகவின் பாணி. ஆகவே, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அதைச் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்” என்று கருத்து தெரிவித்தார்.

முரசொலி விவகாரத்தில் குற்றம்சாட்டியவர்கள் உரிய ஆவணங்களைத் தாக்கல் செய்யவில்லை என திமுக குற்றம்சாட்டியுள்ளது தொடர்பான கேள்விக்கு, “அரசு தரப்பிலும் அதிகாரிகள் தரப்பிலும் ஆவணங்களைத் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரியுள்ளனர். அவர்களுக்கு ஜனவரி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, அப்போது ஆவணங்களை ஒப்படைப்பார்கள் என நம்புகிறோம்” என்று பதிலளித்தார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share