பட்ஜெட்டால் பாமக கோரிக்கை நிறைவேறியது: ராமதாஸ்

Published On:

| By Balaji

தமிழக பட்ஜெட்டை துணை முதல்வர் பன்னீர் செல்வம் தாக்கல் செய்து உரையாற்றி வரும் நிலையில், இதன்மூலம் பாமக கோரிக்கை நிறைவேறியதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்,

2020-21ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், முக்கிய அம்சமாக அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். பெண்களின் பாதுகாப்புக்காக 75 கோடி ரூபாய் செலவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலை பல்கலை மருத்துவக் கல்லூரியை அரசு ஏற்று, கடலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரியாகச் செயல்படுத்தப்படும் என்று துணை முதல்வர் அறிவித்துள்ளார்.

பட்ஜெட் குறித்து பல்வேறு தரப்பினரும் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று நடத்தும் என்ற பட்ஜெட் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதன்மூலம் கடலூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற பாமகவின் கோரிக்கை வெற்றி அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், ”அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு ரூ.500 கோடியும், காவிரி -குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு நிலம் எடுப்பதற்காக ரூ.700 கோடியும் ஒதுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ள அவர், தமிழ்நாட்டு நலனுக்காகப் பிற பாசனத் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பெண்களின் பாதுகாப்புக்காக அனைத்து அரசு பேருந்துகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டில் அறிவித்ததன் மூலம் பாமகவின் மற்றொரு கோரிக்கை நிறைவேறியது என்றும் குறிப்பிட்டுள்ளார்,

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share