நேர்மையாக வரிசெலுத்துவோரை கவுரவிக்க புதிய திட்டம்!

Published On:

| By Balaji

வரி செலுத்துவோரை கௌரவிப்பதற்கான புதிய திட்டத்தை பிரதமர் துவங்கிவைத்தார்.

நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்க ‘வெளிப்படையான வரிவிதிப்பு-நேர்மையாக வரி செலுத்துவோருக்கு கவுரவம்’ என்ற திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் இன்று (ஆகஸ்ட் 13) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திட்டத்தை தொடங்கிவைத்து உரையாற்றிய பிரதமர், “நாட்டில் கட்டமைப்பு சீர்திருத்தங்களின் நடைமுறை இன்று ஒரு புதிய கட்டத்தை எட்டியுள்ளது. வெளிப்படையான வரிவிதிப்பு – நேர்மையானவர்களுக்கு மரியாதை என 21 ஆம் நூற்றாண்டின் வரி முறையின் புதிய அமைப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சி பயணத்தில், வரிசெலுத்துவோர் சாசனம் மிகப் பெரிய நடவடிக்கை.

இதற்காக புதிதாக தொடங்கப்பட்டுள்ள தளத்தில், முகமில்லா மதிப்பீடு, முகமில்லா மேல்முறையீடு மற்றும் வரிசெலுத்துவோர் சாசனம் போன்ற முக்கிய சீர்திருத்தங்கள் உள்ளன. முகமில்லா மதிப்பீடு மற்றும் வரிசெலுத்துவோர் சாசனம் இன்று முதல் அமலுக்கு வருகிறது” என்றும் குறிப்பிட்டார்.

முகமில்லா மேல்முறையீடு வசதி, நாடு முழுவதும் மக்களுக்கு செப்டம்பர் 25ம் தேதி முதல் கிடைக்கும் எனவும், வரிசெலுத்தும் முறை, இன்று முகமில்லாததாக மாறியுள்ளதால், இது வரி செலுத்துவோருக்கு நியாயம், அச்சமின்மை என்ற நம்பிக்கையை அளிப்பதாகவும் தெரிவித்த அவர், “சிக்கலான நிலை இருக்கும்போது, வரித்தாக்கலும் சிக்கலாக இருக்கிறது. சட்டம் மிக தெளிவாக இருந்தால், வரி செலுத்துவோருக்கும், நாட்டுக்கும் மகிழ்ச்சி. பல வரிகளை மாற்றி ஜிஎஸ்டி வந்தது போல், இந்த பணியும் சில காலமாக மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும், “நமது வரி முறை தடையற்ற, வலியற்ற, முகமற்றதாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் முயற்சி. தடையற்றது என்றால், வரி செலுத்துவோர் ஒவ்வொருவரையும் குழப்புவதற்கு பதிலாக, சிக்கலைத் தீர்க்க வரி நிர்வாகம் செயல்பட வேண்டும் என்பதுதான்” என்று விளக்கிய பிரதமர், இந்த முயற்சிகளுக்கு இடையே, கடந்த 6-7 ஆண்டுகளில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டரை கோடி உயர்ந்துள்ளது. 130 கோடி பேர் வசிக்கும் நாட்டில், இந்த அளவு மிக குறைவு என்பதும் உண்மைதான் என்றும் அவர் தெரிவித்தார்.

**எழில்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share