அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளியான நிலையில், அதுகுறித்து நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.
நீண்டகாலமாக நடந்துவந்த அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று (நவம்பர் 9) காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் வழங்கப்பட்டது. அதில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இனி ராமர் கோயில் அறக்கட்டளைக்கு வழங்கப்படும் என்றும், இஸ்லாமியர்களுக்கு அயோத்திக்குள்ளேயே 5 ஏக்கர் மாற்று இடத்தை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ராமர் கோயில் கட்டுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று மாலை 6.00 மணிக்கு நாட்டு மக்களிடம் தோன்றி உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “எனது மனதில் இருப்பதை நாட்டு மக்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அயோத்தி வழக்கு தினமும் விசாரிக்கப்பட வேண்டும் என்று நாடு முழுவதும் விரும்பப்பட்டது. அது உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. பல ஆண்டுகளாக நடந்துகொண்டிருந்த இவ்வழக்கு இன்று முடிவுக்கு வந்துள்ளது.
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது. பல ஆண்டுகளாக நீடித்துவந்த சர்ச்சை முடிவுக்கு வந்து புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்றுத் தருணம். நீதி, நியாயம் மீது மக்களுக்கு நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது” என்று குறிப்பிட்டதோடு,
“உச்ச நீதிமன்றம் இந்தியாவின் வலிமையான அமைப்பு என்று நிரூபணமாகியுள்ளது. மக்களாட்சி வலிமையாக தொடர்கிறது என்பதை இந்தியா காட்டியுள்ளது. இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமைக்கு இந்த நாள் மிகச்சிறந்த உதாரணம் ஆகும். இந்திய ஜனநாயகம் எவ்வளவு வலிமையானது என்பதை உலக நாடுகள் புரிந்துகொண்டுள்ளன” என்றும் தெரிவித்துள்ளார்.
My address to the nation. https://t.co/xeMEuOyun0
— Narendra Modi (@narendramodi) November 9, 2019
தீர்ப்பிற்குப் பிறகு சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும், ஒவ்வொரு மதத்தினரும் அதனை வரவேற்ற விதம் இந்தியாவின் பண்டைய கலாச்சாரம் மற்றும் சமூக நல்லிணக்க பாரம்பரியத்திற்கு ஒரு சான்றாக அமைந்துள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், இந்த முடிவு அனைவரின் சம்மதத்துடன் வந்தது என்பது முழு நாட்டிற்கும் மகிழ்ச்சியான விஷயம் எனவும் தெரிவித்தார்.
மேலும், “வேற்றுமையும் எதிர்மறை எண்ணங்களும் மறைந்த தினம் இன்று. புதிய இந்தியாவில் பயம், கசப்பு, எதிர்மறை எண்ணங்களுக்கு இடமில்லை. இந்திய தேசத்தை கட்டமைக்கும் பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ளது. நமது ஒற்றுமையே புதிய இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். நவம்பர் 9-ம் தேதி பெர்லின் சுவர் தகர்க்கப்பட்ட நாள், கர்தார்பூர் வழித்தடம் திறக்கப்பட்ட நாள். இன்று அயோத்தி தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நாள் விடுக்கும் செய்தி என்னவென்றால் அனைவரும் ஒற்றுமையாக இருந்து முன்னேற வேண்டும் என்பதுதான்” என்றும் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
�,”