கொரோனாவுக்கு எதிரான மக்களின் போர்: பிரதமர்

public

கொரோனாவுக்கு எதிராக மக்களும் அரசும் இணைந்து போர் நடத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையில் அகில இந்திய வானொலி வழியாக “மன் கி பாத்”(மனதின் குரல்) என்ற நிகழ்ச்சி மூலம் பொதுமக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றிவருகிறார். கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஒரு மாதம் முடிந்துவிட்டது.

. இந்த நிலையில் மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் இன்று (ஏப்ரல் 26) உரையாற்றிய பிரதமரின் பேச்சு முழுக்க, கடந்த முறை போலவே கொரோனா வைரஸ் பற்றியதாகத்தான் இருந்தது.

“கொரோனா வைரஸுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடந்து வருகிறது. இதை மக்களால் நடத்தப்படும் போர் என்றே நான் அழைப்பேன். கொரோனாவுக்கு எதிரான போரில் ஒவ்வொரு குடிமகனும் வீரர்களை போல போராடுகிறார்கள். அரசின் ஒவ்வொரு துறைகளும் 24 மணிநேரமும் மக்களுக்கு உதவுவதற்காக செயல்பட்டு வருகிறது. பொதுமக்களும், அரசு நிர்வாகமும் இணைந்து போரிட்டு வருகிறது. கொரோனாவுக்கு எதிராக மக்களால் நடத்தப்படும் போர் நிச்சயம் வெல்லும் என நம்புகிறேன். கொரோனாவிலிருந்து உலகம் மீண்டுவிட்டது என்ற நல்ல செய்தியுடன் அடுத்த முறை உங்களிடம் பேசுகிறேன்” என்று பிரதமர் தெரிவித்தார்.

“கொரோனா பெருந்தொற்றுக்கு நடுவில் நம் நாட்டில் யாரும் பசியுடன் உறங்கக் கூடாது என்பதை உறுதி செய்ய விவசாயிகள் உழைத்து வருகிறார்கள். சிலர் வீட்டு வாடகைகளை தள்ளுபடி செய்கிறார்கள், பள்ளிகளில் தங்கியிருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் அங்கு வெள்ளையடிக்கிறார்கள். இப்படி ஒவ்வொருவரும் தங்களின் சக்திக்கு ஏற்ப போரை நடத்துகிறார்கள்.” என்று பாராட்டிய பிரதமர்,

“இந்த இக்கட்டான சூழலில் பணக்கார நாடுகள் கூட தேவையான மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் தவித்தனர். இந்தியா தனது கலாச்சார முறைப்படி அடுத்தவர்களுக்கு உதவக்கூடிய எண்ணத்தின் அடிப்படையில் பல்வேறு நாடுகளுக்கு தேவையான மருந்துகளை கொடுத்து உதவினோம்” என்றும் குறிப்பிட்டார்.

மேலும், “கொரோனா வைரஸ் காரணமாக முகக்கவசங்கள் நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாறி வருகின்றன. முகக்கவசம் அணிந்துள்ள அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அர்த்தமல்ல. முகக்கவசம் ஒரு நாகரீக சமூகத்தின் அடையாளமாக மாறும். பிறரை நோயிலிருந்து பாதுகாக்க விரும்பினால் அதன் பயன்பாடு மிகவும் முக்கியம்.” என்றும் குறிப்பிட்டார்.

கொரோனாவைக் கையாள்வதில் செயல் திறன் மிக்க மாநில அரசின் பங்கை நான் பாராட்டுகிறேன். கடந்த காலங்களில் காவல்துறையினர் குறித்து தவறான எண்ணங்கள் மட்டுமே நம் மனதில் இருந்து வந்தது ஆனால் இன்று அவர்களின் சேவை அளப்பரியதாக உள்ளது. அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் முக்கியமானது: அவர்களை தாக்குவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறிய பிரதமர்,

“மிகவும் கடினமான சூழலில் ரம்ஜான் நோன்பு தொடங்கியுள்ளது. ரம்ஜான், ஈத் பண்டிகைகளுக்கு முன்பு உலகம் கொரோனா வைரஸிலிருந்து விடுபட முன்பை விட அதிகமாக பிரார்த்திக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

**எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *