ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்ணின் அடிப்படையில் 11ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
கொரோனா காரணமாக இந்தாண்டு, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழில் தேர்ச்சி என்று மட்டுமே குறிப்பிட்டு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. அந்த மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் உயர்கல்வி சேர்க்கை நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அறிவித்தார்.
அதுபோன்று பாலிடெக்னிக், தொழிற்பயிற்சி நிறுவனங்கள் உள்ளிட்ட படிப்புகளுக்கு ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், பள்ளிக்கல்வி ஆணையர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்ணின் அடிப்படையில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்ணின் அடிப்படையில் தேர்ச்சி செய்யப்படுவார்கள்.
2019 – 2020ஆம் கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பில் படித்த மாணவர்கள், அந்த ஆண்டில் காலாண்டு மற்றும் அரையாண்டு ஆகிய இரு தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் உள்ளதோ, அந்த மதிப்பெண்ணை கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.
ஒரு மாணவர் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் இரண்டையும் எழுதி, ஏதாவது ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாமல் இருந்தால், அந்தப் பாடத்தில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்படும்.
ஒரு மாணவர் காலாண்டு மற்றும் அரையாண்டு என இரு தேர்வுக்கும் வராத நிலையில், அந்த மாணவருக்குக் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்படும்.
11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு, ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்ணின் அடிப்படையில் மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும்.
இந்த வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி மதிப்பெண் பட்டியலை வழங்கிட வேண்டும். அதனடிப்படையில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,