kபிளாஸ்மா தானம் வழங்கிய சென்னை போலீசார்!

Published On:

| By Balaji

கொரோனா தொற்று காலத்தில், முன்னணி களபணியாளர்களாக இருக்கும் காவல் துறையினர் நாளொன்றுக்கு பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்து வருகின்றனர். இதில், அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நிலையும் ஏற்படுகின்றன. எனினும், பாதிப்பிலிருந்து குணமடைந்து மீண்டும் தங்களது கடமையைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். இதுமட்டுமின்றி கொரோனாவால் பாதிக்கப்படும் போலீசார் உயிரிழப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்து வரும் சூழலில், சென்னையைச் சேர்ந்த 40 போலீசார் தானம் செய்துள்ளனர். இவர்களது சேவைக்கு தற்போது பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

இதுகுறித்து சென்னை காவல்துறை தெரிவித்துள்ளதாவது,

“கொரோனா காலத்தில், கடமைகளை நிறைவேற்றும் போது ஏராளமான பொதுமக்களுடன் தொடர்பு கொள்கின்ற ஒரு நிலையும் உள்ளது . தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையிலும், 1920 காவல்துறை அதிகாரிகள் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டனர். 1549 காவல்துறை அதிகாரிகள் இத்தொற்று நோயிலிருந்து சிகிச்சை பெற்றுக் குணமாகி மீண்டும் பணிக்குச் சேர்ந்துள்ளனர்.மேற்குறிப்பிட்ட காவல்துறை அதிகாரிகள் தங்கள் கடமைகளை முன்பிருந்த அதே அர்ப்பணிப்புடனும், ஆர்வத்துடனும் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்த 48 காவல்துறைப் பணியாளர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன் வந்தனர் . மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர், 38 காவல் துறைப் பணியாளர்கள் நேற்று (ஆகஸ்ட் 13) பிளாஸ்மா தானம் செய்யத் தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டனர் .

சென்னை பெருநகர காவல் துறையின் ஆயுதப் படையைச் சேர்ந்த 38 காவல் துறையினர் உள்ளிட்ட 40 காவல் பணியாளர்கள் ( 2 பெண் காவல் துறையினர் ) சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் , காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா தானம் செய்தனர் ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை காவல்துறையினரின் இந்த உயர்ந்த சேவைக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

**-கவிபிரியா**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share