நாஞ்சில் மலையை எல்லையாகக் கொண்ட நாடு அல்லது நாஞ்சில் மலையை உள்ளடக்கிய நாடு, நாஞ்சில் நாடு. நாஞ்சில் உணவுகளில் பெரும்பாலும் வீட்டுத்தோட்டத்தில் விளைகிற தேங்காய், வாழை, பலா போன்றவை இடம்பெறும். தேங்காய், முக்கியப் பொருளாக இருக்கும். அவியல், எரிசேரி, புளிசேரி, தீயல், பச்சடி மற்றும் பாயசம் போன்றவை தலைவாழையிலையில் பரிமாறப்படும். அவற்றில் இந்த வாழைக்காய்த் துவட்டல் முக்கிய இடம்பெறும்.
**என்ன தேவை?**
வாழைக்காய் – 2
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
உளுந்து – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – 10 இலைகள்
தேங்காய் எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
அரைக்க…
தேங்காய்த் துருவல் – 4 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 2 (தோலுரிக்கவும்)
பூண்டு – 3 பற்கள்
சீரகம் – அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - ஒன்று
**எப்படிச் செய்வது?**
வாழைக்காயைத் தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் அதில் நறுக்கிய வாழைக்காய்த் துண்டுகள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவைக்கவும். வாழைக்காய் பாதி வெந்ததும் தண்ணீரை முழுவதும் வடித்துக்கொள்ளவும்.
ஒரு இரும்பு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்விட்டு, சூடானதும் அதில் கடுகு, உளுந்து சேர்த்துத் தாளிக்கவும். பின்னர் கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து வதக்கவும். பிறகு வேகவைத்த வாழைக்காயைச் சேர்த்து தேங்காய் விழுதோடு நன்கு புரட்டிக்கொள்ளவும். மீதமுள்ள தேங்காய் எண்ணெயைச் சுற்றிலும் ஊற்றி நன்கு முறுகலாகும் வரை வறுக்கவும். வாழைக்காய் நன்றாக முறுகியதும் இறக்கவும்.
**[நேற்றைய ஸ்பெஷல்: சாப்பிட்டவுடன் என்ன செய்கிறீர்கள்?](https://minnambalam.com/public/2021/11/14/1/what-to-do-after-taking-food)**
.�,