நிலாவின் மேற்பரப்பு: சந்திரயான்-2 அனுப்பிய முதல் படம்!

Published On:

| By Balaji

சந்திரயான்-2 எடுத்த சந்திர மேற்பரப்பின் முதல் ஒளிரும் படத்தை இஸ்ரோ வெளியிட்டது.

செப்டம்பர் 7ஆம் தேதி நிலாவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் மென்மையான தரையிறக்கத்தின்போது, புவியுடனான தொலைத்தொடர்பை இழந்தது. வெறும் 14 நாட்கள் மட்டுமே ஆயுட்காலம் கொண்ட லேண்டரை தொடர்புகொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.

இந்த நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சந்திர மேற்பரப்பின் முதல் ஒளிரும் படத்தை வெளியிட்டுள்ளது. நிலாவைச் சுற்றி வரும் சந்திரயான்-2 ஆர்பிட்டலிருக்கும் இமேஜிங் இன்ஃப்ராரெட் ஸ்பெக்ட்ரோமீட்டர் (ஐஐஆர்எஸ்) பேலோடால் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று (அக்டோபர் 17) மாலை வெளியிட்டிருக்கிறது. இந்தப் படத்தில் வடக்கு அரைக்கோளத்தில் சந்திர தொலைதூரத்தின் ஒரு பகுதி பதிவாகியிருக்கிறது; மேலும் சில முக்கிய பள்ளங்களையும் இந்தப் படம் உள்ளடக்கியிருக்கிறது என்று இஸ்ரோ தனது அதிகாரபூர்வ வெளியீட்டில் தெரிவித்தது.

இஸ்ரோவின் கூற்றுபடி, ஐஐஆர்எஸ் சூரியஒளியின் பிரதிபலிப்பை அளவிடவும், சந்திர மேற்பரப்பில் இருந்து சந்திர ஒளி வெளியேறும் ஒரு பகுதியை அளவிடவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. சூரிய கதிர்வீச்சு பிரதிபலிக்கும் பகுதியும், வெப்ப உமிழ்வு கூறுகளின் பகுதியையும் குறிக்கும் வரைபடத்தைப் படமாக இஸ்ரோ வெளியிட்டிருக்கிறது.

தற்போது வெளியாகியுள்ள படத்தில் சில முக்கிய பள்ளங்கள் காணப்படுகின்றன (சோமர்ஃபீல்ட், ஸ்டெபின்ஸ் மற்றும் கிர்க்வுட்). புவியியல் சூழலில் சந்திரனின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்வது ஐஐஆர்எஸ்ஸின் முக்கிய நோக்கமாகும். தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சந்திர மேற்பரப்பு அமைப்பின் பன்முகத்தன்மை குறித்து முக்கியமான முடிவுகள் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி, சந்திரயான்-2 ஆர்பிட்டரின் ஹை ரெசல்யூஷன் கேமரா (ஓஹெச்ஆர்சி) எடுத்த சந்திரனின் படங்களை இஸ்ரோ வெளியிட்டது. அதைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள புகைப்படம், ஐஐஆர்எஸ் நிலாவின் மேற்பரப்பில் எடுத்துள்ள முதல் ஒளிரும் படமாகக் கருதப்படுகிறது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share