ெயற்கை இனிப்பு மற்றும் ரசாயனங்கள் இல்லாத ஆரோக்கியமான உணவான ஜவ்வரிசியில் ருசியான பைனாப்பிள் அல்வா செய்து இந்த நாளை சிறப்பாக்கலாம். ஜவ்வரிசியில் கார்போஹைட்ரேட் மற்றும் ஸ்டார்ச்சு அதிகமுள்ளதால் அனைவருக்கும் ஏற்றதாக அமையும்.
**என்ன தேவை?**
ஜவ்வரிசி – ஒரு கப்
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
பைனாப்பிள் சாறு – அரை கப்
பைனாப்பிள் துண்டுகள் – அரை கப்
வெதுவெதுப்பான பால் – 5 டேபிள்ஸ்பூன் (சில குங்குமப்பூக்கள் போட்டு ஊறவைக்கவும்)
சர்க்கரை – ஒரு கப்
ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
நறுக்கிய டிரை ஃப்ரூட்ஸ் (பாதாம், முந்திரி, பிஸ்தா) – 4 அல்லது 5 டேபிள்ஸ்பூன்
**எப்படிச் செய்வது?**
வெதுவெதுப்பான நீரில் ஜவ்வரிசியை நான்கு மணி நேரம் ஊறவைத்து, வடிகட்டியால் தண்ணீரை வடித்துக் கொள்ளவும். ஒரு பெரிய பாத்திரத்தில் சர்க்கரையுடன் ஒரு கப் தண்ணீரைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். சர்க்கரைப் பாகானது இரண்டு கம்பிப் பதத்துக்கு வரும்வரை கலவையைக் கொதிக்கவிடவும் (சர்க்கரைப் பாகை தண்ணீரில் போட்டால் மென்மையான உருண்டையாக உருண்டு வரவேண்டும். இதுவே இரண்டு கம்பிப் பதம்). இரண்டு கம்பிப் பதம் வந்தவுடன் பாகுடன் குங்குமப்பூ – பால் கலவையை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
ஒரு பெரிய கடாயில் நெய்யைச் சூடாக்கவும். அதில் ஊறவைத்து வடிகட்டி வைத்திருக்கும் ஜவ்வரிசியைச் சேர்த்து 4 நிமிடங்களுக்கு வறுக்கவும். அல்லது ஜவ்வரிசி கண்ணாடிபோல பளபளப்பாக மாறும்வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் நெய்யில் வறுத்த ஜவ்வரிசியை சர்க்கரைப் பாகில் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறவும். இதனுடன் பைனாப்பிள் சாறு மற்றும் பைனாப்பிள் துண்டுகளைச் சேர்த்துக் கிளறவும். பிறகு ஏலக்காய்த்தூள், உலர் பழங்களையும் சேர்த்து நன்கு கிளறி அல்வா பதத்துக்குச் சுருண்டு வந்தவுடன் இறக்கவும். இந்த அல்வாவைச் சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறலாம்.
**[நேற்றைய ரெசிப்பி: ஜவ்வரிசி பேல்](https://minnambalam.com/public/2022/02/09/1)**
.