வாய்பேச முடியாதவர்களும் தேர்தலில் போட்டியிடலாம்!

Published On:

| By Balaji

உள்ளாட்சித் தேர்தலில் வாய்பேச முடியாதவர்களும் போட்டியிடலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 3 வருடங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத சூழல் நிலவி வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் தொடங்கப்பட்டன. வாக்குச் சீட்டு அச்சிடுதல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கோருதல், வார்டுகள் ஒதுக்கீடு, ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி, சுயேச்சைகளுக்கு சின்னங்கள் அறிவிப்பு என தேர்தல் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவந்தன. மேலும், காவல் துறை, அரசு ஊழியர்கள் இடமாற்றம், தேர்தல் தொடர்பான ஆலோசனை என தற்போது அது அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

இந்த நிலையில் வாய்பேச முடியாத, காது கேட்காத மாற்றுத் திறனாளிகள் மற்றும் தொழுநோயாளிகள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்பு வரை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் காது கேளாதோர், மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொழு நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் மனுக்களையும் நிராகரிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.

இந்தச் சட்டத்தில் திருத்தம் செய்ய தமிழக அரசு முடிவுசெய்த நிலையில், சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் மற்றும் தமிழ்நாடு மாவட்ட முனிசிபல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, நடந்துமுடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. வரும் உள்ளாட்சித் தேர்தலிலேயே இதனை அமல்படுத்த தேர்தல் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share